சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலையில் மீண்டும் போலீஸ்... அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லாததால் சர்ச்சை! | Police searches sealed Gutka factory in Coimbatore without informing other department officials create ire

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (03/05/2018)

கடைசி தொடர்பு:16:40 (03/05/2018)

சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலையில் மீண்டும் போலீஸ்... அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லாததால் சர்ச்சை!

சீல் வைக்கப்பட்டுள்ள கோவை குட்கா ஆலையில், அதிகாரிகள் யாருக்கும் தகவல் கொடுக்காமல், போலீஸ◌ார் இன்று மீண்டும் சென்றதால் சர்ச்சை ஆகியுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள கோவை குட்கா ஆலையில், அதிகாரிகள் யாருக்கும் தகவல் கொடுக்காமல், போலீஸ◌ார் இன்று மீண்டும் சென்றதால் சர்ச்சை ஆகியுள்ளது.

சீல் வைக்கப்பட்டுள்ள கோவை குட்கா ஆலைக்குள், அதிகாரிகள் யாருக்கும் தகவல் கொடுக்காமல், போலீஸார் இன்று மீண்டும் சென்றதால் சர்ச்சை ஆகியுள்ளது.

குட்கா ஆலை

கோவை, கண்ணம்பாளையத்தில் உள்ள குட்கா ஆலையில், எஸ்.பி மூர்த்தி தலைமையில், கடந்த வாரம் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தினர். 15 மணி நேரம் நீடித்த சோதனை முடிவில், 750 கிலோ குட்காவும், 20 டன் மூலப்பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகக் குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் உட்பட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படைத்தன்மையாக நடத்தக் கோரி, ஆலையின் முன்பாகத் தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 7 பேரை போலீஸார் கைது செய்தனர். சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திக்கை போலீஸ் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து, நேற்று எஸ்.பி ஆபீஸை முற்றுகையிட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலைக்குள், இன்று காலை 10 மணி அளவில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நுழைந்தனர். எதற்காக மீண்டும் காவல்துறையினர் ஆலைக்குள் சென்றுள்ளார்கள் என டி.எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, “குட்கா பொருள்களை, நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக, பேக்கிங் செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என்றார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் என எந்த அதிகாரிகளும் இல்லாத நிலையில், காவல்துறையினர் குட்கா பொருள்களை பேக்கிங் செய்வதாகக் கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பொதுவாக, சீல் வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சீலை பிரிக்க வேண்டுமென்றால், அந்த ஊரின் அரசு அதிகாரிகள் முன்னிலையில்தான் பிரிக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. இதையடுத்து, போலீஸாரின் இந்த செயல்பாடுகள் குறித்து சூலூர் தாசில்தார் ஜெகதீசனிடம் கேட்டபோது, “காவல்துறையினர் வந்தது குறித்து எங்களுக்குத் தகவல் சொல்லப்படவில்லை” என்றார்.

நீண்ட நேரத்துக்குப் பிறகு, ஆலையில் இருந்த சில மூட்டைகள் மாருதி கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டன. அந்தக் கார் சூலூர் ஆய்வாளர் தங்கராஜின் கார் என்று கூறப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் இருக்கும்போது, மூட்டைகளை ஆய்வாளரின் காரில் ஏன் கொண்டு சென்றனர்? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. அங்கு, உண்மையிலேயே குட்கா பொருள்களைப் பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்றனவா அல்லது வேறு இடத்தில் குட்கா பொருள்கள் வைக்கப்பட்டுள்ளனவா என்பது போன்ற எந்தக் கேள்விகளுக்கும் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் பதில் அளிக்கவில்லை.