டூரிஸ்ட் கைடுகளால் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்! | Two arrested in kovalam foreign tourist murder case

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/05/2018)

கடைசி தொடர்பு:18:00 (03/05/2018)

டூரிஸ்ட் கைடுகளால் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

கோவளத்தில் வெளிநாட்டு இளம் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவளத்தில் வெளிநாட்டு இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட உதயன், உமேஷ்

லாட்வியா (latvian) நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மன அழுத்த நோய்க்காகத் திருவனந்தபுரத்தை அடுத்த போத்தன்கோட்டில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி அவர் காணாமல் போனார். இதுகுறித்து அவரின் சகோதரி இலீஸ், போலீஸில் புகார் கொடுத்தார். மேலும், இளம்பெண்ணின் கணவர் ஆண்ட்ரூஸ், கேரள டி.ஜி.பி-யைச் சந்தித்து புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவளம் வாழமுட்டம் பகுதியில் மாங்குரோவ் காட்டுக்குள் வெளிநாட்டு இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீஸார், முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர். ஆனால், இளம்பெண்ணின் கணவரும் சகோதரியும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி கடந்த சில நாள்களுக்கு முன்பு
5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோவளத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக வலம் வந்த உமேஷ், உதயன் ஆகிய
2 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கணவர் ஆண்ட்ரூஸ், சகோதரி இலீஸ்

இதுகுறித்து கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெளிநாட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை மீடியாக்கள் வெளியிட வேண்டாம். தங்களை டூரிஸ்ட் கைடு எனக் கூறி இளம்பெண்ணை நம்ப வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த உமேஷ், உதயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தர்ப்ப சாட்சியங்களைவிட விஞ்ஞான ரீதியான ஆவணங்களே குற்றவாளிகளைக் காட்டிக்கொடுத்தது. இறந்த இளம்பெண்ணின் உடலில் கிடந்த ஓவர்கோட் உதயனுடையது. உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிதறிக்கிடந்த முடிகளும் இவர்கள் இருவருடையதுதான். ரசாயனம் மற்றும் தடயவியல் அறிக்கை வந்த பிறகுதான், கொலை என உறுதி செய்த பிறகே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

"ஆயுர்வேத சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறிய இளம்பெண் கோவளம் பாணாத்துறை கோயிலில் ஆட்டோவில் இறங்கியுள்ளார். அங்கு உதயன், உமேஷ் ஆகியோர் டூரிஸ்ட் கைடு என அறிமுகம் செய்துகொண்டு பல இடங்களைச் சுற்றிக் காண்பித்துள்ளனர். பின்னர், கஞ்சா தருவதாகக் கூறி பைபர் போட்டில் ஏற்றி வாழமுட்டம் பகுதியில் மாங்குரோவ் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்து அன்று மாலையிலே கொலை செய்துள்ளனர். மேலும், இதுபோல பல சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். விசாரணை மேலும் தொடரும்" என்கின்றனர் கேரள போலீஸார்.