வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (03/05/2018)

கடைசி தொடர்பு:19:40 (03/05/2018)

`வீட்டில் இருக்கும் பெண்கள் வெட்டியாக இல்லை’ - கர்நாடக உயர் நீதிமன்றம்

’பலரும் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல வீட்டில் இருக்கும் பெண்கள் வெட்டியாக இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி ராகவேந்திர செளஹான்

கர்நாடகா உயர் நீதிமன்றம்

’அம்மா என்ன செய்றாங்க’ என்னும் கேள்விக்கு ’வீட்டுல சும்மா இருக்காங்க’ என்ற பதிலைப் பல முறை கேட்டிருப்போம். பெரிதும் மாற்றப்பட்டுவிடாத இந்தக் கருத்துக்கு ஓர் அடியாக, ``வீட்டில் பணிபுரியும் பெண்களும் ப்ரொபஷனல்கள்தான்” என சமீபத்தில் அளித்த ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம். 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கெளரவ் (37), ஸ்வேதா (34) ஆகியோரின் திருமணம் 2009-ல் நடந்திருக்கிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, பெங்களூருவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார் கெளரவ். இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஸ்வேதா முசாஃபர்நகரில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு முறையும் கர்நாடக நீதிமன்றத்துக்கு வர வேண்டிய தேவையிருப்பதால், வழக்கை இடம் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஸ்வேதா மனுத்தாக்கல் செய்திருக்கிறார். `வழக்கை இடம்மாற்ற முடியாது. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும் செலவுகளைக் கணவரிடம் பெற்றுக்கொள்ளலாம்’ என்று கூறி உச்ச நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், இரண்டு நாள் வழக்கு விசாரணைக்கான போக்குவரத்து மற்றும் தங்குவதற்கான செலவு என 32,114  ரூபாயைக் கேட்டு ஆவணங்களைச் சமர்பித்திருக்கிறார் ஸ்வேதா. இதையடுத்து ஸ்வேதாவுக்கு அந்தத் தொகையை அளிக்கும்படி பெங்களூரு குடும்பநல நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கௌரவ் தரப்பு முறையிட்டது. அப்போது, ’வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு ரயிலில் வருவதற்கு நேரம் இருக்காதா? ஸ்வேதா தேவையான செலவைச் செய்யவில்லை’ என்று செலவுகளை ஏற்க மறுத்து வாதாடிய கெளரவ் தரப்புக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் பதில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 

`ஸ்வேதா, ரயிலில் வர விரும்பாமல் விமானத்தில் சென்றிருப்பதாகக் கூறி இந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்வதிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஒன்றுமே செய்யவில்லை என்னும் உங்களின் வாதம், பாலின சமத்துவத்தைக் குறித்த உங்களின் அறியாமையைக் காட்டுகிறது. மற்ற வேலைகளைச் செய்பவர்களைப் போலவே, வீட்டில் இருக்கும் பெண்களும் கடுமையாக உழைக்கிறார்கள். பலரும் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல வீட்டில் இருக்கும் பெண்கள் வெட்டியாக இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார் நீதிபதி ராகவேந்திர செளஹான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க