வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (03/05/2018)

கடைசி தொடர்பு:20:55 (03/05/2018)

``19 பேரைப் பலிவாங்கிய வெடிமருந்து ஆலையைச் செயல்படுத்தி எங்க கிராமத்தையே அழிக்க நினைக்கிறீங்களா?"

துறையூர் அருகேயுள்ள வெடிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியான நிலையில், அந்த ஆலையை மீண்டும் திறக்க முயற்சி செய்வதாகக் குற்றஞ்சாட்டி கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ளது டி.முருங்கபட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் இயங்கிவந்த `வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்' எனும் தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கல் குவாரிகள் மற்றும் சுரங்கங்களுக்குத் தேவையான வெடிப்பொருள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலையில் கடந்த 2016- ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்கு வந்து பார்வையிட்ட அமைச்சர்கள் மீது செருப்பை வீசி மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சாலைமறியல், குடிபுகும் போராட்டங்களையும் நடத்தியதைத் தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரியும் விசாரணை நடத்தினார். இந்நிலையில் ஆலை நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற்சாலை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வெடிமருந்து தொழிற்சாலை மூட கோரிக்கை

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மக்களின் கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, அந்த வழக்கை முடித்து வைத்தது. இதற்கிடையே திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர், வெடிமருந்து தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்கினார். எனவே, `நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் வழங்கப்பட்ட இந்தத் தடையில்லா சான்றுக்குத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்' என்று கிராம மக்கள் மீண்டும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கிய தடையில்லா சான்றுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து, வெடிமருந்து தொழிற்சாலை தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக்கோரியும், தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரக்கோரியும் கடந்த 12-ம்தேதி துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் துறையூர் தாசில்தார் சந்திரகுமார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, `வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ் தொழிற்சாலை' நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் பச்சைமலை மேல் உள்ள மண்மலை பெருமாள்கோவிலுக்குச் செல்லும் பாதை ஆகியவற்றை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கிய பின்னரும், அந்தத் தொழிற்சாலையில் சுமார் 45 தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். அவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களிடம் ஒப்படைக்கக்கோரியும் நடராசன், பெரியசாமி, பழனியப்பன் ஆகியோர் தலைமையில் டி.முருங்கப்பட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினர். அவர்களின் போராட்டம்  எட்டு நாள்களாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

தொழிற்சாலை

இதற்கிடையே, வெடிமருந்து தொழிற்சாலையை அகற்றக்கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களுடன் முசிறி போலீஸ் டி.எஸ்.பி சீதாராமன் மற்றும் துறையூர் வட்டாட்சியர் சந்திரகுமார் ஆகியோர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ``இந்த வெடிமருந்துத் தொழிற்சாலையால் விவசாய வெள்ளாமையும் போச்சு. நிலத்தடி நீரும் நாசமாகிப் போச்சு. மேலும், இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் உயிரும் பறிபோய் விட்டது. இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகும் அதிகாரிகள் இந்த ஆலையைத் திறக்க முயல்வது ஏன் என்று தெரியவில்லை. அவர்களின் செயலைப் பார்க்கும்போது, சுற்றுவட்டார கிராமங்களை அழிக்கவே அவ்வாறு நடந்து கொள்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே, தற்போது வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைபார்க்கும் தொழிலாளர்களைக் கைது செய்ய வேண்டும்" என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, ``எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை தொடர்ந்து போராடுவோம்" என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்வார்களா அரசு அதிகாரிகள்...? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்