பத்திரிகை சுதந்திரம் - 138-ம் இடத்துக்குச் சென்றது இந்தியா!

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது 13 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

பத்திரிகை சுதந்திரம்

இத்தகவல்களை வெளியிட்டுள்ள பத்திரிகைக் கண்காணிப்பு இணையதளமான ’தி ஹூட்’, தணிக்கை தொடர்பாக 50 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன; 20 முறை இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளது. மூன்று கைது/ பிடித்துவைப்பு சம்பவங்களும் 5 மிரட்டல்களும் 7 அவதூறு வழக்குகளும் ஒரு தேசத்துரோக வழக்கும் இந்தக் காலகட்டத்தில் பத்திரிகையாளர்களால் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. அரசின் கொள்கையால் 8 முறையும் நீதிமன்ற உத்தரவுகளால் இரண்டு முறையும் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தி ஹூட் தெரிவித்துள்ளது. 

தி ஹூட்டின் கடந்த ஆண்டு அறிக்கைப்படி, 46 பத்திரிகையாளர் மீதான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு நடந்துள்ள தாக்குதல்களில் மேற்குவங்கத்தில் மட்டும் மூன்று தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த நான்கு மாதங்களில் நடந்துள்ள தாக்குதல்களில் குறைந்தது 10 நிகழ்வுகளில் இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளோ அல்லது போலீஸோதான் தாக்கியவர்களாக இருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை. இதைத் தவிர, எல்லையற்ற செய்தியாளர் அமைப்பு எனும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, பத்திரிகை சுதந்திர நிலவரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 180 நாடுகளில் இந்தியா இரண்டு புள்ளிகள் கீழே இறங்கி 138-வது இடத்துக்குச் சென்றுள்ளது. கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று இடம் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!