`கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முடிவுகள்’ - பதறும் சென்னை அ.தி.மு.க! | Chennai ADMK bit nerves over co-operative society elections

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (03/05/2018)

கடைசி தொடர்பு:21:00 (03/05/2018)

`கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முடிவுகள்’ - பதறும் சென்னை அ.தி.மு.க!

வடசென்னை அ.தி.மு.க. (தெற்கு) மாவட்டச் செயலாளராக, நா.பாலகங்கா இருக்கிறார், இவர் பொறுப்பில்தான், `வெள்ளாளர் கூட்டுறவுச் சங்கமும், புதுப்பேட்டை கூட்டுறவுச் சங்கமும் இருக்கிறது. இந்த சொசைட்டிக்கான தேர்தல் பஞ்சாயத்து கடந்த ஒரு வாரமாக நடந்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸில் ஆரம்பித்து அனைத்துக் கட்சிகளிடமும் நாங்கள் (அ.தி.மு.க.வினர்), `அய்யா சாமி, எங்களுக்கு ரெண்டே ரெண்டு டைரக்டர் போஸ்ட் பிச்சை போடுங்கய்யா' ன்னு கெஞ்சாத குறைதான். ஒன்றும் நடக்கவில்லை இப்போது இரண்டு சொசைட்டியுமே கையை விட்டுப் போய்விட்டது.

கூட்டுறவு தேர்தல்

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல், பொதுத் தேர்தலுக்கு இணையான பரபரப்பைப் பற்ற வைத்து விடுகிறது. துணை ராணுவ வருகையைத் தவிர அனைத்து விதமான பாதுகாப்பும் வழங்கப்படுகிற தேர்தலாகவே இது தமிழகத்தில் அமைந்து விடுகிறது. 
இந்நிலையில், `தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது' என்று தி.மு.க. கோர்ட்டுக்குப் போனது, பதிலுக்குக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம், மேல்முறையீடு செய்தது என்று விவகாரம் நீண்டது. கோர்ட் உத்தரவின்படி இதுவரை நடைபெற்ற 2 கட்டத் தேர்தல் தொடர்பான நிலவர அறிக்கையைப் பிரமாணப் பத்திரமாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மே-2 ம் தேதி தாக்கல் செய்திருந்தது.
அதில், ``கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 39,277 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 4,525 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 12,924 மனுக்கள் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. இரண்டாம் கட்டத் தேர்தலில் 42,479 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 2,726  மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 17,412 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மூன்றாம் கட்டத் தேர்தலில்  48,555 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 5,348 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. 19,476 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன" என்று சொல்லப்பட்டிருந்தது.

 தேனீ மாவட்ட கூட்டுறவுத் தேர்தல் மோதல்

``கூட்டுறவுச் சங்கத்துக்கான தேர்தல், `பேசி முடித்துக்கொள்ளும் தேர்தல்' போல ஆகிவிட்டது. ஆளுங்கட்சி என்று வீண் பெருமை மட்டும்தான் மிச்சம், தி.மு.க. உள்ளிட்ட சர்வ கட்சிகளிடமும் நாங்கள் சரண்டர் ஆகிப் போயிருக்கிறோம் என்பதே உண்மை" என்று அ.தி.மு.க.வினர் புலம்பலும் கூடவே கேட்கத் தொடங்கியுள்ளது.
 

`அங்கே என்ன சார் சத்தம் ?' என்றபடி விசாரித்தோம்.

"உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் சகஜம். இப்போது நிலைமையே தலைகீழாக மாறிப் போய் இருக்கிறது. எதிர்க்கட்சியான தி.மு.க. எதற்குக் கோர்ட்டுக்கெல்லாம் போகிறதோ தெரியவில்லை. இங்கே, தி.மு.க. சொல்கிற ஆள்கள்தான் சொசைட்டி தலைவர்கள், அவர்கள் சொல்கிற பிற கட்சியினர்தான் சொசைட்டி டைரக்டர்கள் என்ற நிலைமைதான் இருக்கிறது. வடசென்னை அ.தி.மு.க. (தெற்கு) மாவட்டச் செயலாளராக, நா.பாலகங்கா இருக்கிறார், இவர் பொறுப்பில்தான், `வெள்ளாளர் கூட்டுறவுச் சங்கமும், புதுப்பேட்டை கூட்டுறவுச் சங்கமும் இருக்கிறது. இந்த சொசைட்டிக்கான தேர்தல் பஞ்சாயத்து கடந்த ஒரு வாரமாக நடந்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸில் ஆரம்பித்து அனைத்துக் கட்சிகளிடமும் நாங்கள் (அ.தி.மு.க.வினர்), `அய்யா சாமி, எங்களுக்கு ரெண்டே ரெண்டு டைரக்டர் போஸ்ட் பிச்சை போடுங்கய்யா' ன்னு கெஞ்சாத குறைதான். ஒன்றும் நடக்கவில்லை இப்போது  இரண்டு சொசைட்டியுமே கையை விட்டுப் போய்விட்டது. இங்கு, தேர்தல்தான் என்று டிக்ளேர் செய்து, இன்று (3.5.2018)  நோட்டீஸ் ஒட்டி விட்டார்கள். இதேபோல், ஜார்ஜ் டவுன் கூட்டுறவு சொசைட்டியும், அமைச்சர் ஜெயகுமாரின் சொந்தத் தொகுதியில் இருக்கும் `ராயபுரம் இளங்கோ கூட்டுறவு சொசைட்டியும் பெரும்பான்மை பதவிகளை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் பறி கொடுக்கும் நிலைமை உறுதியாகிவிட்டது.

இதே நிலைமைதான் அடுத்து வரப்போகிற உள்ளாட்சித் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் என்பது இப்போதே நன்றாகத் தெரிகிறது. இத்தனைக்கும் இங்கு போட்டியிட்டவர்கள், கட்சியின்  அணிச் செயலாளர்களான எஸ்.எஸ்.கே.கோபால், பீமராவ் போன்றவர்கள்தாம். கட்சியில் ஏதாவது கௌரவப் பதவி இருந்தால் பிசினஸ் ஓடும் என்று கணக்குப் போட்டு உள்ளே இறங்கிய `ஆதரவு' தொழிலதிபர்களுக்கும், அல்வாதான் கிடைத்திருக்கிறது. ஆளுங்கட்சி என்று நாங்கள் சொல்வதை விட எங்களை ஆளும் எதிர்க்கட்சிகளே உண்மையான ஆளுங் கட்சியாக இருக்கிறார்கள். கட்சிக்காக அடி உதை பட்டு, சிறை சென்ற நாங்கள், `உள்குத்து, பிசினஸ் டீலிங், அன்டர்ஸ்டாண்டிங் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்து கொண்டோம்" என்றனர்.
 ஆக, தி.மு.க. ஆள்கிறது!