`தமிழ் மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' - கமல்ஹாசன் ட்வீட்! | Kamal Hassan tweets about allocation of NEET exam for Tamilnadu students

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (04/05/2018)

கடைசி தொடர்பு:08:29 (04/05/2018)

`தமிழ் மாணவர்களை அலைக்கழிப்பது அநீதி' - கமல்ஹாசன் ட்வீட்!

ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

'ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி' என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை மே 6-ம் தேதி நடக்கவிருக்கும் ‘நீட்’ தேர்வை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் எழுத உள்ளனர். அவர்களுக்கு, கேரளாவிலும் ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளனர். 

கமல்ஹாசன்

தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டதால், மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிப்பை வெளியிட்டது. தேர்வு மையங்கள் ஒதுகீடு செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

ஆனால், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை என்று சி.பி.எஸ்.இ பதிலளித்தது. சி.பி.எஸ்.இ-ன் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்தது. தமிழக மாணவர்கள் சி.பி.எஸ்.இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில், ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்’’என்று பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க