ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் - முதுமலை புலிகள் காப்பகத்தில் அத்துமீறல்..!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள், வனப்பகுதியில் அத்து மீறி நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது.

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக  வரும் பயணிகள், அத்து மீறி நடந்துகொள்வது அதிகரித்துள்ளது.

முதுமலை

இவ்வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள், அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுடன், வன விலங்குகள் அருகில் நின்று செல்ஃபி எடுப்பது, உணவளிப்பது, வன விலங்குகளைப் புகைப்படம் எடுப்பது, பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் தூக்கி எறிவது, வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி உணவு சமைப்பது எனப் பல்வேறு வகையில் அத்துமீறி நடந்துகொள்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன், மசினகுடி - மாவனல்லா  பகுதியில் சுற்றுலாப் பயணி குடும்பத்தினர், ரோட்டோரத்தில் வாகனத்தை நிறுத்தி அங்கிருந்த காய்ந்த மரம் ஒன்றில் குழந்தைக்கு தொட்டில் கட்டித் தூங்கவைத்தபடி இயற்கையை ரசித்தனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் அத்துமீறும்போது, அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கையில் “நான் தவறு செய்துவிட்டேன், நீங்களும் செய்ய வேண்டாம்' என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் முதுமலை சந்திப்பில் குறைந்தது 4 மணி நேரம் நிற்கவைக்கலாம். அப்போது, வனப்பகுதியில் அத்து மீறுவது குறையும் ” என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!