முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - சுற்றுச்சூழல் பகுதி-1 #30 | General topics for preliminary examination - Environment part 1

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (04/05/2018)

கடைசி தொடர்பு:10:51 (04/05/2018)

முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - சுற்றுச்சூழல் பகுதி-1 #30

முதன்மைத் தேர்வுக்கான பொதுப் பாடங்கள் - சுற்றுச்சூழல் பகுதி-1     #30

சுற்றுச்சூழல் மற்றும் அது சார்ந்த தலைப்புகளைப் பொறுத்தவரையில், சமீபகாலமாக போட்டித்தேர்வுகளில் குறிப்பாக UPSC தேர்வுகளில் அதிகப்படியான கேள்விகள் இடம்பெறுகின்றன. உதாரணமாக, UPSC-2017 முதன்மைத் தேர்வில் இந்தப் பகுதியிலிருந்து 14 கேள்விகளும், UPSC-2016 முதன்மைத் தேர்வில் 12 கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து அதிக கேள்விகள் கேட்கப்படுவதால், முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய பகுதி இது. 

தேர்வு

நமது சுற்றுச்சூழலின் முக்கிய அங்கங்கள், மனிதன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையேயான பல்வேறு தொடர்புகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழலின் நான்கு விதிகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது அவசியம். நமது சூழலியல் அமைப்பின் (Eco system) வகைப்பாடுகளைப் பொறுத்தவரை முதலில் புவி சார்ந்தவை (Terrestrial) மற்றும் நீர் சார்ந்தவை (aquatic) எனப் பிரிக்கலாம்.

புவி சார்ந்த சூழலியல் அமைப்பை, 1) காடு 2) புல்வெளி 3) பாலைவனம் எனவும், நீர் சார்ந்த சூழலியல் அமைப்பை 1) கடல் 2) ஏரி 3) ஈரநிலம் எனவும் வகைப்படுத்தலாம். இவற்றில் புல்வெளிகளை மிதமான (temperate) மற்றும் வெப்ப மண்டல (tropical) புல்வெளி எனவும் பாலைவனத்தை வெப்பமான மற்றும் குளிர்மிக்க பாலைவனங்கள் எனவும் வகைப்படுத்தலாம். இந்தச் சூழலியல் அமைப்புகளைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களான சூரிய ஒளி, மழை, நீர் இருப்பு, வெப்பம் மற்றும் சூழலியல் அமைப்பின் பல்வேறு முக்கிய அம்சங்களான உற்பத்தித்திறன், கூர்நுனிக் கோபுரங்கள் (ecological pyramids), உணவுச் சங்கிலி (Food Chain), பயோ அக்யுமுலேஷன் (Bio accumulation), பயோ இண்டிகேட்டர் (Bio indicators) மற்றும் எக்கலாஜிக்கல் சக்சஷன் (Ecological succession) பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். தூந்த்ரா (tundra), டால்கா (talga), டெசிடுவஸ் (Deciduous), சவாணா (savanna) உள்ளிட்ட அனைத்து பையோம்களின் சிறப்பம்சங்களும் முக்கியம். 

உதாரணக் கேள்வி:  

1) காமன்சாலிஸம் (commensalism) என்பது, ஓர் உயிரினத்துக்கு மட்டும் சாதகமான மற்றோர் உயிரினத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வகை உறவு.

2) பாராசைட்டிஸம் (parasitism) என்பது, ஓர் உயிரினத்துக்குச் சாதகமாகவும் மற்றோர் உயிரினத்துக்கு பாதகமாகவும் அமையும் வகை உறவு.

இவற்றில்,

1 is correct 

2 is correct 

Both 1 and 2 are correct ( பதில்) 

Both 1 and 2 are wrong 

 

அடுத்ததாக, நாம் பார்க்க இருப்பது சுற்றுச்சூழல் மாசுபாட்டைப் பற்றி.

இது நம்முடைய பள்ளிக்காலத்திலிருந்து படித்துவரும் தலைப்பாக இருந்தாலும், போட்டித்தேர்வுகளுக்காகத் தயாராகும்போது அதிகமாகவும் சற்று ஆழமாகவும் படிப்பது நல்லது. முதலில் நாம் பார்க்க இருப்பது காற்று மாசுபடுவதைப் பற்றி. முதல்நிலை மாசு பொருள்கள் (கார்பன் மோனாக்ஸைடு, கார்பன்-டை ஆக்ஸைடு, CFC போன்றவை), இரண்டாம்நிலை மாசு பொருள்கள் (புகை, பனிப்புகை போன்றவை), காற்று மாசுபடுவதைத் தடுக்க வகுக்கப்பட்டுள்ள பல்வேறு சட்டதிட்டங்கள் (பாரத் ஸ்டேஜ் எமிஷன், காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் 1981 போன்றவை) முக்கியம்.

நீர் மாசுபாட்டை எடுத்துக்கொண்டால், அதன் முக்கிய மாசு பொருள்கள் (இரும்பு, ஃப்ளூரைடு போன்றவை), அதனால் ஏற்படும் பாதிப்புகள், மாசுபாட்டைக் கண்டறியும் விதம், தடுப்புச் சட்டங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒலியால் ஏற்படும் மாசுவைப் பொறுத்தவரையில் ஒலியை அளக்கும் வழிமுறைகள், அளவீடுகள், பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் முக்கியம். அதேபோல் நிலத்துக்கு, குறிப்பாக மண்வளத்துக்கு ஏற்படும் மாசு, கதிர்வீச்சால் ஏற்படும் மாசு, மின்னணுக்களால் ஏற்படும் மாசு ஆகியவற்றைப் பற்றியும் அதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

தேர்வு

அடுத்ததாக, நாம் பார்க்க இருக்கும் தலைப்பு பேரிடர்கள் மற்றும் அவற்றின் மேலாண்மையைப் பற்றி.

பூகம்பம், அதற்கான காரணங்கள், இந்தியா மற்றும் உலக அளவில் முக்கிய பூகம்ப மண்டலங்கள், பூகம்பத்தின் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் வெள்ளம், அதற்கான காரணங்கள், பாதிப்புகள், முக்கிய வெள்ள மண்டலங்கள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல் வறட்சி, சுனாமி, நிலச்சரிவு மற்றும் புயல் போன்ற பேரிடர்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை வழிமுறைகளையும் தெரிந்துகொள்வது அவசியம். செயற்கை / மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர்களைப் பொறுத்தவரை முக்கியத் தொழிற்சாலை விபத்துகள், அணுசக்திப் பேரழிவுகள் போன்றவற்றின் மேலாண்மை முறைகளை தெரிந்துகொள்வது முக்கியம். பேரிடர் மேலாண்மையில் உள்ள பல்வேறு நிலைகள், தடுக்கும் முறைகள் மெயின் தேர்வுகளில் கைகொடுக்கக்கூடியவை.

இந்தியாவில் பேரிடர்களைத் தடுக்க இயற்றப்பட்ட முக்கியச் சட்டங்கள் - தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005, தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கை 2009 மற்றும் பேரிடர் மேலாண்மைக்காக தேசிய அளவில் அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை உரிமை (National Disaster Management Authority), அதேபோல, மாநில மற்றும் மாவட்டங்களில் அமையப்பெற்ற ஆணைய உரிமை போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். தேசிய மற்றும் உலக அளவில் உங்கள் தேர்வுக்காலத்தில் ஏற்படும் பேரிடர்களைக் கவனமாகக் குறிப்பெடுத்து படித்துக்கொள்ளுங்கள். எளிதான இந்தப் பகுதியில் சற்று அதிக கவனம் செலுத்தினால், உடனுக்குடன் பதில் அளிக்கலாம்.

 

- மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்