வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (04/05/2018)

கடைசி தொடர்பு:14:04 (04/05/2018)

'உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தேன்' -  கஞ்சா வியாபாரியின் பகீர் வாக்குமூலம் 

போலீஸ்

சென்னை கண்ணகி நகர் பகுதியில், கஞ்சா வியாபாரி ஒருவரை போலீஸார் சமீபத்தில் பிடித்துள்ளனர். அப்போது அந்த வியாபாரி, உதவி கமிஷனர் ஒருவர், இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை மாமூலாகக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு, விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. கஞ்சா விற்பனைகுறித்து உளவுப்பிரிவு போலீஸார் கொடுக்கும் ரிப்போர்ட், உயரதிகாரிகளின் கவனத்துக்குச் செல்வதில்லை. அந்த அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுடன் சில காக்கிகள் நெருக்கமாக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கொடுக்கும் முக்கிய ரிப்போர்ட், உயரதிகாரிகளின் கவனத்துக்குச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

சமீபத்தில், சென்னை மாநகர உளவுப்பிரிவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், கண்ணகி நகர் கஞ்சா விற்பனை, துரைப்பாக்கம் சிக்னலில் ஐ.டி ஊழியர்களைத் தாக்கி பணம் பறிக்கும் திருநங்கைகள் என சில தகவல்களைக் குறிப்பிட்டு ரிப்போர்ட் அனுப்பியிருந்தனர். ஆனால், அந்த ரிப்போர்ட்டுக்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ரிப்போர்ட் அனுப்பியவர்களிடம், கஞ்சா வியாபாரிகளும் சமூக விரோத கும்பலும் மிரட்டிவிட்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், இந்த ரகசியத் தகவல் எப்படி வெளியானது என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ரிப்போர்ட் அனுப்பும் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரின் மேல் அதிகாரிகள் சிலர் சமூக விரோத கும்பலுடன் நட்பில் இருக்கும் தகவல் கிடைத்தது. இதனால்தான், சமூக விரோத கும்பல் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்தச் சமயத்தில்தான், துரைப்பாக்கத்தைச் சேர்ந்த நுண்ணறிவுப் பிரிவு காவலர் ஒருவர் அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட், சமூக வலைதளத்தில் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதில், ரோந்து போலீஸார் எங்கும் செல்வதில்லை. 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன என சில முக்கியத் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த ரிப்போர்ட் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த விவகாரம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது. தென்சென்னை காவல் சரகத்தில் உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த சிலர்மீது காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன 

 போலீஸ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "தென்சென்னை நுண்ணறிவுப் பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிவபெருமாள் பெயரைக்கொண்ட அதிகாரி ஒருவரும், வெற்றியின் மறுபெயரைக்கொண்ட அதிகாரி ஒருவரும் பணியாற்றிவருகின்றனர். அதில் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தவர். நீண்ட காலமாக இந்தப் பகுதியில் அவர்கள் பணியாற்றுவதால், எல்லோரின் மறுபக்கங்களும் நன்றாகத் தெரியும். இதனால், அந்த அதிகாரிகளைத் தங்களது கைக்குள் போட்டு அரசியல்வாதிகள் முதல் சமூக விரோதிகள் வரை காரியத்தை கச்சிதமாக முடித்துவருகின்றனர். மேலும் இந்தப் பட்டியலில், பணத்தின் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவரும் உள்ளார். இவர்களுக்குக் கீழ் பணியாற்றும் போலீஸார் புலம்பிவருகின்றனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 15 புல்லட் பைக்குகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல்துறையினரால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பான ரிப்போர்ட்டை நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கொடுத்தும், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியின் பெயர், புதுப்பேட்டையில் பழைய காரை விற்ற விவகாரத்தில் அடிப்பட்டது. இருப்பினும், உயரதிகாரிகளின் தயவால் நடவடிக்கையிலிருந்து தப்பிவிட்டார். துரைப்பாக்கம், பள்ளிக்காரணை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. அதாவது, நள்ளிரவில் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் ஐ.டி. ஊழியர்களை வழிமறித்து பணம், நகை, செல்போன், லேப்டாப்களை சில திருநங்கைகள் பறித்துவருகின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கவனிக்கப்படுகின்றனர். திருநங்கைகள்குறித்து ஆதாரத்துடன் ரிப்போர்ட் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும், கண்ணகி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைகுறித்து தனிப்படை போலீஸார் மூன்று சிறுவர்களை சமீபத்தில் பிடித்துள்ளனர். சிறுவர்கள் கைகாட்டிய கஞ்சா வியாபாரியை போலீஸார் சிரமப்பட்டுப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, கஞ்சா வியாபாரி, குறிப்பிட்ட இரண்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர் என மூன்று பேருக்கு ரூ.10 லட்சம் மாமூலாகக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல், போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களிடம் உயரதிகாரி விசாரித்தார். அப்போது, பணம் வாங்கியது உண்மை என்று தெரிந்தது. வாங்கிய பணத்தில் 40,000 ரூபாய் மட்டுமே மீதியிருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பணத்தை கஞ்சா வியாபாரியிடம் திருப்பிக்கொடுக்கவைத்த காவல் உயரதிகாரி, சம்பந்தப்பட்ட வியாபாரியைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்" என்றனர்.   

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, காவல்துறை தலைமையிடத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் தங்களுடைய குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இதனால், சம்பந்தப்பட்ட போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.