வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (04/05/2018)

கடைசி தொடர்பு:13:47 (04/05/2018)

`தமிழக மாணவர்களுக்கு எல்லாவித உதவிகளும் செய்யத் தயார்' - ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு #LetsHelpNEETstudents

‘நீட்’ தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.

நீட்

மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு, மே மாதம் 6-ம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கீடுசெய்திருக்கிறது, சி.பி.எஸ்.இ. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களைக் கேரளாவிலும், ராஜஸ்தானிலும் ஒதுக்கி, தமிழக மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் இந்த உத்தரவுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில், நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் அறிவித்திருக்கிறது.

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சௌந்தரவல்லியைத் தொடர்புகொண்டபோது, “மாணவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். விரைவாகப் பேட்டியை முடித்துவிடுங்கள்” என்ற நிபந்தனையுடன் பேசினார். “1967-லிருந்து ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் இங்கு செயல்பட்டுவருகிறது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள், எங்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறார். தற்போது ‘நீட்’ தேர்வுக்கான மையங்களை ராஜஸ்தானில் அமைத்திருக்கிறார்கள். இது எங்களுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது அதை நாம் யோசித்துக்கொண்டிருக்க முடியாது. நம் பிள்ளைகள் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தோம். முடிவில் நம் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடிவுசெய்தோம். ராஜஸ்தான் செல்லும் மாணவர்கள், ஜெய்ப்பூர் வந்துதான் செல்ல வேண்டும். அதனால், அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, செல்லும் வழி போன்றவற்றை ஏற்பாடுசெய்து தர முடிவெடுத்தோம். எந்தவித ஏற்பாடும் செய்யாமல், வரும் மாணவர்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கும் தங்குமிடம், உணவுக்கூடங்கள் பற்றி வழிகாட்டுகிறோம். இது தவிர, எந்த விதமான உதவியை மாணவர்கள் கேட்டாலும் அதைச் செய்து தர தயாராக இருக்கிறோம். நேரம் குறைவாக இருந்தது. அதனால், சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் மாணவர்களைச் சென்றடைய முடியும் என்பதாலேயே வாட்ஸ் அப் மூலம் தகவலைப் பகிர்ந்தோம்” என்றார்.

 

ராஜஸ்தான் தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் தொடர்பு எண்கள்:

திருமதி. சௌந்தரவல்லி: 9790783187

திரு. முருகானந்தம் : 8696922117

திரு. பாரதி: 7357023549

நீங்க எப்படி பீல் பண்றீங்க