வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (04/05/2018)

கடைசி தொடர்பு:17:39 (04/05/2018)

திருமணத்துக்குப் பெண் தர மறுப்பு! காதலி வீட்டில் தீக்குளித்த கப்பல்படை வீரர் மரணம்! 

கப்பல்படை வீரர் ராகேஷ்குமார்

திருமணத்துக்கு பெற்றோர் மறுத்ததால் காதலி வீட்டிலேயே தீக்குளித்த கப்பல்படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அ.தி.மு.க நகரச் செயலாளர் சௌந்தரராஜன். அவரது இரண்டாவது மகள் அஸ்வினி. அரக்கோணம் அருகேயுள்ள புளியமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்குமார். கப்பல்படை வீரரான இவர் மும்பையில் பணியாற்றி வந்தார். இவரும் அஸ்வினியும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு அஸ்வினிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இந்தச் செய்தி கேள்விப்பட்டு ராகேஷ்குமார் அவரது குடும்பத்தினருடன் கடந்த 29 ம் தேதி திருத்தணியில் உள்ள அஸ்வினி வீட்டுக்குப் பெண் கேட்கச் சென்றுள்ளனர். 

அப்போது செளந்தரராஜன் வீட்டில் இருந்துள்ளார். வந்தவர்களை வீட்டுக்கு உள்ளே வரசொல்லி உட்கார வைத்துவிட்டு வந்த காரணம் கேட்டுள்ளார். அப்போது ராகேஷ்குமார், 'நானும் அஸ்வினியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம்’ என்று சொல்லி இருக்கிறார். அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த ராகேஷ்குமார் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராகேஷ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ராகேஷ்குமார் உயிரிழந்தார். அவரது உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான புளியமங்களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. கப்பல் படை வீரர் ராகேஷ்குமார் மரணம் திருத்தணி அரக்கோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.