வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (04/05/2018)

கடைசி தொடர்பு:16:27 (04/05/2018)

இலவச ரயில் டிக்கெட்; ரூ.1,000 நிதியுதவி - நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு ஏற்பாடு

வெளி மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம் மற்றும் பேருந்துக் கட்டணம் இலவசம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இளநிலை மருத்துவம் படிப்பதற்காக மத்திய அரசின் சி.பி.எஸ்.இ சார்பாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதவுள்ள தமிழக மாணவ, மாணவிகள் பெரும்பாலோனோருக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தநிலையில், வெளிமாநிலங்களுக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை அறிவித்துள்ளது. அதில், வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் அறிவித்துள்ளது. மேலும், பேருந்துக் கட்டணம் மற்றும் ரயில் கட்டணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் மற்றும் அவருடன் உதவிக்குச் செல்லும் ஒருவர் என இருவருக்கு ரயில் இரண்டாம் வகுப்பு கட்டணம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகையை மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கு முன்னதாகப் பணம் பெற இயலாதவர்கள், நீட் தேர்வு முடிந்த பிறகு, உரிய ஆவணங்களைக் காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் மையம் குறித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு 14417 என்ற இலவச அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.