சென்னை போலீஸாரிடம் சிக்கிய கொள்ளையர்களின் திகில் கதை

கொள்ளை

கொள்ளையடித்த நகைகளை ஜார்ஜ் டவுன் பகுதியில் விற்கச் சென்ற கொள்ளையர்கள் வாகன சோதனையில் சிக்கிக்கொண்டனர். அதில் ஒரு கொள்ளையன் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இன்னொரு கொள்ளையனிடமிருந்து நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  

சென்னை கோயம்பேடு, ஐயப்பன் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், நேற்று காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்துவைத்து தூங்கியுள்ளார். கதவு திறந்திருந்ததால், அவரின் வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்தனர். பீரோவை உடைத்து அதிலிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். தூங்கி எழுந்த மாரிமுத்து நகை, பணம் கொள்ளைபோய் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். பிறகு, கொள்ளை குறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கொள்ளையர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்தச் சமயத்தில் சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் இன்று காலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த இரண்டு நபரை மடக்கி போலீஸார்  விசாரித்தனர். அப்போது, ஒருவர் கோயம்பேட்டிலிருந்து வருவதாகவும் இன்னொருவர் எழும்பூரிலிருந்து வருவதாகவும் கூறினர். முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்ததால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் போலீஸ் பிடியிலிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனால், போலீஸாரின் சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து போலீஸாரிடம் சிக்கியவரிடம் விசாரணை நடந்தது.

அவர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, நகை, பணம், செல்போன்கள் இருந்தன. அவை குறித்து விசாரித்தபோது, கோயம்பேட்டில் உள்ள ஒரு வீட்டில் திருடியதாகத் தெரிவித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாரிமுத்து வீட்டில் திருடியது, பாரிமுனையைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் அவரின் கூட்டாளி என்று தெரியவந்தது. திருடிய நகைகளை விற்பதற்காகக் கொள்ளையர்கள் சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். அவரிடமிருந்து 15 சவரன் நகை, ரூ.30,000 மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய இன்னொரு கொள்ளையனைப் போலீஸார் தேடிவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!