வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (04/05/2018)

கடைசி தொடர்பு:18:54 (04/05/2018)

வேட்பாளர் பட்டியலைக் கிழித்தெறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள்! போலீஸ் கண்முன்னே நடந்த அவலம்

தொடக்க வேளாண்மை கடன் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்த சம்பவம் உடுமலைப்பேட்டையில் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து, தேர்தல் அதிகாரி பாண்டியன் என்பவரால் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. 23 பேர் அடங்கிய தகுதியுள்ள வேட்பாளர் பட்டியலை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர்களான அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் புஷ்பராஜ், வடுகபாளையம் அ.தி.மு.க கிளைச் செயலாளர் சுப்ரமணி ஆகியோர் அத்துமீறி கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் புகுந்து தேர்தல் அதிகாரியை மிரட்டி, குடிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் அதிகாரி பாண்டியனை இழுத்து வெளியேற்றி, போலீஸார் கண்முன்னே வேட்பாளர் பட்டியலைக் கிழித்தெறியும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தேர்தல் அதிகாரி வேட்பாளர் பட்டியலைக் கிழிக்க வேண்டாம் என்று நீண்ட நேரம் மன்றாடுகிறார். ஆனால், நீலக்கலர் சட்டை அணிந்துள்ள கிளைச் செயலாளர் சுப்ரமணி, ‘‘வேட்பாளர் பட்டியலைக் கிழிக்கிறீர்களா, வெளியிலிருந்து ஆள் கூட்டிவரவா என்று மிரட்டல் விடுக்கிறார். இதற்கிடையில் மேலிடத்திலிருந்து வரும் அலைபேசி அழைப்பு ஆய்வாளர் முருகனிடம் கொடுக்கப்படுகிறது. அதில் என்ன உத்தரவு  வந்ததோ தெரியவில்லை. அதுவரை இணக்கமாகப் பேசிய ஆய்வாளர், நெருப்பாக, மாறி சங்கத்தைவிட்டு தேர்தல் அதிகாரி உள்ளிட்ட ஊழியர்களைக் கையைப்பிடித்து தரதரவென்று இழுத்து வெளியேற்றும் வேலையைச் செய்தார். அதன் பிறகு, ஆளுங்கட்சியினர் சாவகாசமாக வேட்பாளர் பட்டியலைக் கிழித்தெறியும் காட்சி பதிவாகியுள்ளது.

இது சம்பந்தப்பட்ட குடிமங்கலம் காவல் ஆய்வாளர் முருகனிடம் கேட்டோம். ''இரண்டு தரப்பும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவியது. அசம்பாவிதம் நிகழக் கூடாது என்பதற்காகச் சங்கத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினோம்'' என்று கூலாகச் சொன்னவரிடம். திடீர் என்று வந்த அலைபேசியில் யார் பேசினார்கள் என்றோம். 'அப்படியா... எந்தப் போனும் அப்போது எனக்கு வரவில்லை' என்றார்.

இந்தப் பரபரப்பான சம்பவம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் அமைப்பாளர் செ.நல்லசாமியிடம் பேசினோம். ''அனைத்துக் கூட்டுறவு சங்கங்களின் பதவியில் ஆளுங்கட்சியினரே இருக்க வேண்டும் என்கிற பேராசையில் இப்படியான இழிவான காரியத்தை ஆளுங்கட்சியினர் போலீஸார் துணையுடன் அரங்கேற்றி வருகிறார்கள். முறைப்படி தேர்தலைச் சந்திக்க அச்சப்பட்டு தோல்விபயத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, வேட்பாளர் பட்டியலைக் கிழிப்பதுடன், தேர்தல் நடத்தாமலே, புதிய நிர்வாகிப் பட்டியலை ஒட்டிச்செல்கிறார்கள். இதுவரை நாட்டிலுள்ள எந்த மாநிலத்திலும் நடைபெறாத அராஜகம் இது. இதைத் தட்டிக்கேட்கும் பொதுமக்களைக் காவல்துறை தடியடி நடத்தி விரட்டியடிக்கிறது.
இனி வரும் உள்ளாட்சித் தேர்தலில் இந்த நடைமுறை அரங்கேறுமோ என்கிற அச்சம் மக்களிடம் பரவி வருகிறது'' என்றார் ஆக்ரோஷமாக.