மோடியை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நபர் சிறையில் அடைப்பு..!

பிரதமர் மோடியை விமர்சிப்பதுபோன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். 25 வயது இளைஞரான இவர், திருப்பூர் குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் மோட்டார் மெக்கானிக்காகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, பிரபாகரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியைத் தவறாகச் சித்திரித்து ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். அதில் ஆடை அணியாத மோடி, சிறு பூந்தொட்டி ஒன்றை வைத்து தன் உடலை மறைப்பது போன்று சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவு நாட்டின் பிரதமரைக் கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாகவும், மோடியை ஆபாசமாக மார்பிங் செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் நபரைக் காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட திருப்பூர் வடக்குக் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞர் பிரபாகரனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சின்னசாமி, ``புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையை வெகுவாகப் பாராட்டுகிறோம். நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு தலைவரைப் பற்றி தவறாகப் பதிவிடும் இதுபோன்ற செயல்களை இனி யாரும் செய்யமாட்டார்கள் என எண்ணுகிறோம். அதேசமயம் கடந்த சில நாள்களாக மர்ம நபர்கள் சிலர், என்னுடைய தொலைபேசி எண்ணுக்குத் தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். மிகவும் தரம்தாழ்ந்த கொச்சையான வார்த்தைகளால் பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர்களையும் திட்டுகிறார்கள். மேலும் மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் செல்போன் எண்களைக் கேட்டு வற்புறுத்துகிறார்கள். இரவு 2 மணிக்கெல்லாம் செல்போனில் அழைத்து தவறான வார்த்தைகளால் பேசுவது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதுதொடர்பாகவும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளேன். காவல்துறை அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!