பேங்க் வேலையை உதறி இயற்கை மணமேடைகள் அமைக்கும் தொழில் தொடங்கிய இளைஞர்!

தென் மாவட்டங்களில் தென்னை ஓலைகளை துக்க காரியத்துக்குப் பயன்படுத்துவதால்,அதைக் கொண்டு சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் பண்ணுவதை அபசகுணமா நினைக்குறாங்க. அவங்க எண்ணத்தை மாற்றி, நம்மாழ்வாரை மேடை அலங்காரம் மூலமா அவங்க மனசுல விதைக்குற காரியத்துல தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்போம்.

பேங்க் வேலையை உதறி இயற்கை மணமேடைகள் அமைக்கும் தொழில் தொடங்கிய இளைஞர்!

`` `இயற்கைங்கிறது வெறும் விவசாயம் மட்டுமல்ல; நாம் வாழும் சூழல், இருக்கும் சூழல், பயன்படுத்தும் பொருள்கள்ன்னு எல்லாம் இயற்கையாக இருக்கணும்; இயற்கையாக இருக்க வைக்கணும். அதுதான், நாம் இயற்கையோடு இயைந்து வாழுறோம்ங்கிறதுக்கான குறியீடு'ன்னு என் மனசுல நம்மாழ்வார் அய்யா ஆழமா விதைச்சுட்டு போனார். அதனால்தான், மனசுக்குப் புடிக்காம பார்த்துக்கிட்டிருந்த பேங்க் வேலையை உதறித் தள்ளிட்டு இயற்கை மேடை அலங்காரம், மண மேடை அமைப்பதுன்னு நிகழ்ச்சி நிரல்கள் நடக்கும் இடங்களையும் இயற்கை சூழலுக்கு மாத்தும் வேலையை இப்போ பார்த்துக்கிட்டு இருக்கேன்" என்று பேச ஆரம்பிக்கிறார் ஆனந்தபெருமாள். 


இயற்கை மணமேடை 

திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் இவர் விளையாட்டாகச் செய்த இயற்கைப் பொருள்களை கொண்டு அமைக்கும் இயற்கை மேடை அலங்காரம் பெங்களூரு வரை இவரை மேடை அலங்காரம் செய்ய வைத்திருக்கிறது. கரூர் மாவட்டம், வானகத்தில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நம்மாழ்வார் அவர்களின் மனைவி சாவித்திரி அம்மாள் கையால்,`நிகழ்' என்ற பெயரில் தான் செய்யும் தொழிலுக்கான பெயரை வெளியிட வைத்தார். 

 நிகழ்

``எனக்குச் சொந்த ஊர் மதுரை மாவட்டம்,பொன்னவரம். பி.பி.ஏ முடிச்சுட்டு, 2001 ல் பிரபல தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம். ஆனால்,ஒரு கட்டத்துல அந்த வேலை வெறுத்துப் போச்சு. எனக்கு இயற்கையாகவே காடு, மலைன்னு இயற்கை நோக்கிப் பயணிக்கிறது பிடிக்கும். அப்பதான், டி.வி,பத்திரிகைகளில் நம்மாழ்வார் இயற்கை குறித்து பேசவும்,`யார்றா இந்த மனுஷன்?'ன்னு கவனிக்க ஆரம்பிச்சேன். அவர் மீது பிடிப்பு வந்துச்சு. 2005 வாக்குல திருநெல்வேலிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவரை கால்மணி நேரம் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. `இளைஞர்கள் இயற்கை மீது காதல் கொள்வது நல்ல விசயம். வானகத்துக்கு வந்து உங்ககிட்ட இருக்கிறதை கொடுங்க. அங்க இருக்கிறதை எடுத்துக்குங்க'ன்னு சொன்னார். அதனால், அவரோடு இணைந்திருந்த சிவகாசி கருப்பசாமி, ஆறுமுகம் ஆகியோரிடம் ஐக்கியமானேன். ஐந்து வருடங்கள்ல பார்த்துக்கிட்டு இருந்த பேங்க் வேலையையும் விட்டுட்டேன். இயற்கை தேடி பயணிக்கத் தொடங்கினேன்.

 இதற்கிடையில், நம்மாழ்வார் அய்யா மறைய, அவரது பிறந்த நாள் விழாவில் தேங்காய் ஓடுகள், உடைந்த மரக்கட்டைகள், இலைகளை வச்சு சின்ன சின்னதா சிற்பம் செஞ்சு, வானகத்துல வச்சேன். அது பலரோட கவனத்தையும் ஈர்த்துச்சு. அதை நம்மாழ்வார் நினைவு நாள் விழாவுல பெருசா பண்ணச் சொன்னாங்க. பெரிய சைஸ் சிற்பங்களா செஞ்சு வச்சேன். அதோட, இயற்கை ஆர்வலர் ம.செந்தமிழன் நடத்துற செம்மை வனம் அமைப்பு ஏற்பாடு செய்த பிறண்டை திருவிழாவுல விறகுகள், கட்டைகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் மேடை அலங்காரம் பண்ணினேன். அதைத் தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவா போட்டார் செந்தமிழன். அதிலிருந்து பலர் என்னை இயற்கைப் பொருள்களைக் கொண்டு மேடை அமைக்கச் சொன்னாங்க. அப்படி விளையாட்டா ஆரம்பிச்சதுதான், இன்னைக்கு நம்மாழ்வார் அய்யா கருத்துகளை மேடை இயற்கை அலங்காரம் மூலமும் வெளிக்கொணரும் பாக்கியத்தை பெறும் அளவுக்குக் கொண்டு போயிருக்கிறது.

 இயற்கை பொருள்கள்

வானகத்துல நம்மாவார் அய்யா பிறந்த நாள், நினைவுநாள் விழாக்கள்ல தொடர்ச்சியா அங்க கிடைக்கும் இயற்கைப் பொருள்கள், வேஸ்டேஜ்களை வைத்து மேடை அலங்காரம் பண்ணிட்டு வர்றோம். குறிப்பா, குப்பைகளை மேடை அலங்காரமா மாற்ற ஆரம்பித்தேன். அதோடு, தேங்காய் சிரட்டைகளை வச்சு நாங்க செய்யும் மேடை அலங்காரச் சிற்பங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால், பெங்களூரு வரை எங்களுக்கு இயற்கை மேடை அலங்காரம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த ஏரியாவுல புழங்குற பொருள்களை வைத்து மேடை அலங்காரம் பண்றோம். சென்னைன்னா, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு அலங்காரம் செய்வேன். மற்ற மாவட்டங்களில் அந்ததந்த மாவட்டங்களில் கிடைக்கும் கழிவுகள், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்கிறோம். கடந்த ஜூன் மாதம் அடையாறு பார்க்குல உள்ள ரிசர்ச் சென்டரில் அடையாறு பாலத்துக்கு அடியில் கிடந்த மரக்கட்டைகளை பொறுக்கி, அதை வச்சு கப்பல் மாதிரி அலங்காரம் செய்தோம். அதை ஒருத்தர் ஆன் த ஸ்பாட்டிலேயே 35,000 கொடுத்து வாங்கிட்டுப் போனார். பெங்களூருல மறைந்த பாடகர் பி.பி.சீனிவாஸூக்குச் சொந்தமான கட்டடத்தில் ஒரு டாக்டர் இல்ல மணவிழா நடந்தது. அதுக்கு நடிகைகள் சரிதா, குஷ்பு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வந்தாங்க. அதுல, நாங்க வேஸ்டான தேங்காய் ஓடு, வாட்டர் பாட்டில்கள், லைட்ஸ், நூலை வைத்து சிலந்தி வலைன்னு வித்தியாசமா பண்ணினோம். எல்லோரும் ரசிச்சாங்க. 


 நிகழ்

அப்புறம், விருதுநகர்ல இயற்கை ஆர்வலர் ஒருத்தர், `பசுமை திருமணம்'ன்னு பண்ணினார். எங்களுக்கு அலங்காரம் பண்ணும் வாய்ப்பைக் கொடுத்தார். அரை ஏக்கர்ல பண்ணினோம். மணமேடை அமைச்சு, மேடை பின்னாடி பப்பாளி விதைகளை விதைச்சு, அதை வளர வைத்தோம். இப்படி பல மரவிதைகளை ஊன்றி அவற்றை வளர்த்து, அந்த இடத்தையே, புதுவிதமா மாத்தினோம். அப்புறம், சென்னை எம்.ஜி.ஆர் கலைக்கல்லூரியில் நடந்த உலக சித்தா மாநாடுல அலங்காரம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது. ஈரோடு கொங்கு கலைக் கல்லூரியில் `வள்ளுவ குடும்பம்'ங்கிற அமைப்பு வாய்ப்பு கொடுத்தது. அங்கே கொச்சைக் கயிறை மட்டுமே பயன்படுத்தி, திருவள்ளுவர் சிலையை அமைத்தோம். அதுவும் எங்களுக்குப் பேர் வாங்கிக் கொடுத்தது. அப்புறம், திருச்சியில கண்ணன்ங்கிறவர் `பொன்னி ஆர்கானிக் மரபு அங்காடி' ஆரம்பித்தார். அந்தக் கடையின் இன்டீரியல் டெக்கரேஷனை இயற்கையாக அமைக்கச் சொன்னார். நிரந்தரமா உள்ள விஷயத்துல, எங்களால அமைக்க முடியுமான்னு தயங்கினோம். ஆனால், கண்ணன் நம்பிக்கை கொடுத்தார். கோரைப்பாய், பேக்கிங் வுட்கள்களைப் பயன்படுத்தி, ராக்கைகள், அங்காரங்களைச் செய்தோம். அதுவும் பேர் வாங்கிக் கொடுத்தது. இந்த மேடை அலங்காரம் முயற்சியை நான் மட்டும் பண்ணலை. பருவதவர்தினி, கணேசன்னு மூணு பேரும் சேர்ந்து பண்றோம். இதைத் தவிர, கோக்கனட் ஆர்ட் ஷோ பண்றோம். கழிவு மேலாண்மை இலவசப் பயிற்சியைப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். பள்ளிகளுக்கே போய் கிளாஸூம் எடுக்கிறோம். என்.ஜி.ஓக்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். 
 திருவள்ளுவர்

இயற்கையா மேடை அமைப்பதை ஏழ்மையின் குறியீடா காட்டுறாப்புல இருக்குன்னு பலரும் யோசிக்கிறாங்க. பனைமட்டையைப் பயன்படுத்தி அமைக்கிறோம். அதேபோல், தென் மாவட்டங்களில் தென்னை ஓலைகளை துக்க காரியத்துக்குப் பயன்படுத்துவதால், அதைக் கொண்டு சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் பண்ணுவதை அபசகுணமா நினைக்குறாங்க. அவங்க எண்ணத்தை மாற்றி, நம்மாழ்வாரை மேடை அலங்காரம் மூலமா அவங்க மனசுல விதைக்குற காரியத்துல தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்போம். நாங்க இப்படி இந்த முயற்சியை விளையாட்டா ஆரம்பிச்சோம். இப்போ ஓரளவு பலனை கொடுத்திருக்கு. இதை உரிய அடையாளத்தோடு செய்ய ஏதுவாக நம்மாழ்வார் அய்யா துணைவியார் சாவித்திரி அம்மாளை வைத்து, `நிகழ்'ன்னு எங்க முயற்சிக்கு ஒரு பெயரை வைத்து, அதை அவர் கையால் வெளியிட வைத்துள்ளோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரும் மேடை அலங்காரத்தின் மூலமும் நம்மாழ்வார் அய்யாவை பிரதிபலிச்சுகிட்டே இருப்போம். அதுதான் அவருக்கு நாங்கள் செய்யும் குருகாணிக்கை!" என்றார்

குருவுக்கு ஏற்ற சிஷ்யர்கள்!.
                                                                                                          

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!