நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! வருமான வரித்துறை அலுவலகத்துக்குப் பூட்டு போட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி

நீட் தேர்வைக் கண்டித்து சேலம் மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தைப் பூட்டி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வைக் கண்டித்தும், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுத அனுமதி அளிக்க வலிறுத்தியும் சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்குள் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் உள்ளே புகுந்து முற்றுகைப் போராட்டம் செய்ததோடு வருமான வரித்துறை அலுவலகத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 

அப்போது சேலம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணிச் செயலாளர் கவியரசு ஜெனரேட்டர் மீது ஏறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அஸ்தம்பட்டி காவல்துறையினர் தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 8 நிர்வாகிகளைக் கைது செய்து கூட்டிச் சென்றார்கள்.

இதுபற்றி தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணிச் செயலாளர் கவியரசன், ``தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைக் கலைக்கும் நீட் தேர்வு தமிழகத்துக்கு நிரந்தரமாகத் தேவையில்லை. அதை உடனே ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு அந்தந்த மாநிலத்திலேயே எழுத அனுமதிக்காமல் வெளி மாநிலத்துக்குச் செல்ல இருப்பதால் தமிழக மாணவ, மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். கடந்த ஆண்டு நம் மாநிலத்திலேயே நீட் தேர்வு நடந்தபோது சோதனை என்ற பெயரில் தோடு, முழுக்கை, முடி கலைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் அளவுக்குச் சோதனை செய்து அசிங்கப்படுத்தினார்கள்.

தற்போது மொழி தெரியாத வெளி மாநிலத்துக்குக் குழந்தைகளை அனுப்புவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அவர்களின் முன்பாதுகாப்புக்கு அரசு எந்த ஓர் உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் கண்டித்து மத்திய வருமான வரித்துறை அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டுள்ளோம். இப்படியே மாநில சுயாட்சி பறிபோய் கொண்டிருப்பது ஜனநாயக நாட்டுக்கு அழகில்லை' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!