வெளிமாநிலம் செல்லவேண்டிய நீட் மாணவர் விவரம் - சிபிஎம் தலைவரிடம் மறுத்த சி.பி.எஸ்.இ. அதிகாரி!

நீட் சி.பி.எஸ்.இ.

தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று மதியம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், ஏ.பாக்கியம், ஆர். வேல்முருகன் மற்றும் இளைஞர், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் திடீர்ப்  போராட்டத்தில் கலந்துகொண்டனர்.  

ஆர்ப்பாட்டத்தின்போது கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருப்பவர்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை வெளி மாநிலங்களில் தேர்வு எழுதவேண்டும் என அறிவித்துள்ளனர். இதற்கெதிராக பெற்றோர்கள், பொதுநல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இங்கேயே தேர்வு மையங்களை அமைத்து தேர்வு எழுத அனுமதியுங்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகாவது மத்திய அரசும், சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைக்கிறோம் என அறிவித்திருக்காலம். ஆனால் சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க முடியாது; ஏற்கனவே அறிவித்தபடிதான் தேர்வு நடத்துவோம் எனக் கூறிவிட்டது. காவிரி உள்பட்ட தமிழகத்தின் எந்த கோரிக்கையையும் ஏற்காத உச்சநீதிமன்றம் இப்போது அறிவித்தபடி தேர்வை நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டது. 

ஒரு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத தமிழ்நாட்டில் தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என்று கூறி இங்கிருந்து எர்ணாகுளத்தில், ராஜஸ்தானில் போய் எழுது எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு மொழி பிரச்சினை உள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் செல்லும்போது, அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? ஏதாவது அசாம்பாவிதம் நடைபெற்றால் யார் பொறுப்பு? அங்கே எங்கு போய் தங்குவது. அங்கே தேர்வு மையத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என யார் வழிகாட்டுவார்கள்? இப்படி எந்த முன் ஏற்பாடும் இல்லாமல், திட்டமிடலும் இல்லாமல் சிபிஎஸ்இ நிர்வாகம் தேர்வை நடத்துகிறது. 

தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அதில் அவர்கள் வெற்றிபெறக் கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமும் செயல்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வரைத் தொடர்புகொண்டு மாணவர்களுக்கு இலவசப் போக்குவரத்து, தங்கும் வசதியைச் செய்துகொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளோம். அதேபோல் கேரள முதல்வரைட் தொடர்புகொண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் உடனடியாக அங்குள்ள உதவிச் செயலாளரிடம் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். உதவி செயலாளர் உடனடியாக இங்கே நம்மை தொடர்பு கொண்டு எவ்வளவு மாணவர்கள் வருகிறார்கள். எந்தெந்த மையத்திற்கு எவ்வளவு மாணவர்கள் என்ற விவரத்தை கேட்டார்கள். அதற்காக இங்குள்ள இந்திய இளநிலை கல்விக்கழக மண்டல அலுவகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விவரத்தைக் கேட்டால், இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இந்த தேர்வை நீட் விங் தனியாக நடத்துகிறது எனக் கூறுகிறார். அப்படியென்றால் இங்கே எதற்கு இந்த அலுவலகம் என்று கேட்டால், பள்ளிகளை மேற்பர்வையிடுவதற்கு மட்டும்தான் எனக் கூறுகிறார்கள்.

பிறகு 5,375 மாணவர்கள் வெளிமாநிலத்திற்குச் சென்று தேர்வு எழுத உள்ளதாக தெரிவித்தனர். சரி எந்தெந்த தேர்வு மையத்திற்கு எவ்வளவு பேர் செல்கிறார்கள் என்ற விவரத்தை கொடுங்கள் நாங்கள் கேரள அரசிடம் தெரிவித்து உதவி செய்யுங்கள் எனக் கோருகிறோம் என்றால், அதற்கும் அதிகாரி எங்களால் அதைக் கூற முடியாது; தில்லியில் இருந்துததான் வாங்கி அனுப்ப வேண்டும் என்கிறார். நாங்கள் உரிய விவரம் கிடைக்கும் வரை இந்த அலுவலகத்தை விட்டு செல்லமாட்டோம். மேலும் அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் என்பது போதுமானதல்ல. ஒரு மாணவன் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு ராஜஸ்தான் சென்று வர முடியுமா? எனவே மாநில அரசு அவர்களுக்கு தேவையான போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தையும் ஏற்பாடு செய்துதர வேண்டும்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!