வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/05/2018)

கடைசி தொடர்பு:23:30 (04/05/2018)

பணமதிப்பிழப்பின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்? வைகோவுக்கு மார்க்சிஸ்ட் பதில் கேள்வி

வைகோ vs மார்க்சிஸ்ட்

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைப்பயணம் மேற்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடைப்பயணத்தின் போது நடந்த பொதுக்கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்துப் பேசினார். நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிப்பதாகவும், அதனால் தான் தனது நடைப்பயண துவக்க நிகழ்வில் பங்கேற்க கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நியூட்ரினோ திட்டத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியை வைகோ தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதற்கு மார்க்சிஸ்ட் தற்போது பதில் அளித்திருக்கிறது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதிலளித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், "எந்தவொரு பிரச்சனையின் மீது போராட எந்தக் கட்சிக்கும் உரிமை உண்டு. நியூட்ரினோ ஆய்வு மையத்தை எதிர்த்து வைகோ மேற்கொண்ட நடைப்பயணத் துவக்க விழாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியை அவர் அழைத்தார். வர இயலாது என்பதை எழுத்துப்பூர்வமாக அவருக்குத் தெரிவித்தோம். ஆனால் பொது வெளியில் மார்க்சிஸ்ட் கட்சி மீது வைகோ விமர்சனம் செய்தார்.

வைகோ நடத்திய நடைப்பயணத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. திட்டத்தைப் பொறுத்த வரையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பல்வேறு ஐயங்கள் இருக்கிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படும், ஆய்வுக் கூடம் அமைப்பதால் முல்லைப்பெரியாறுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன. இதற்குத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசு முதலில் விளக்கம் சொல்ல வேண்டும். திட்டம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

அது தொழிற்சாலை அல்ல. ஆய்வுக்கூடம் தான். இந்த ஆய்வுக் கூடத்தால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னால் எதிர்த்துப் போராடும் முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். எனவே மத்திய அரசு இதுகுறித்து ஏன் வாய் திறக்கவில்லை. மத்திய அரசும், அறிவியல் துறையும் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுத் தெளிவுபடுத்தவில்லை என்றால், விளக்கம் போதுமானதாக இல்லையென்றாலும் உங்களோடு சேர்ந்து போராடவும் தயார். விளக்கம் அளிக்கப்படாத நிலையில் போராடுவது சரியல்ல என்பதைத் தெரிவித்தோம் .

கருத்தொற்றுமை உள்ள பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவோம். கருத்தொற்றுமை இல்லாத பிரச்சனைகளில் தனித்துச் செயல்படுவதுதானே முறை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற எல்லாப் போராட்டங்களிலும் வைகோவால் கலந்து கொள்ள முடியுமா? அந்தந்த கட்சிகளுக்கு தனித்தனி கொள்கை இருக்கிறது. பண மதிப்புநீக்க நடவடிக்கையைத் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்த போது வைகோ மட்டும் வாழ்த்துச் சொல்லி வரவேற்றார். இது குறித்து வைகோவை நாங்கள் பொது மேடையில் விமர்சனம் செய்ததில்லை. அதற்குக் குறைபட்டுக்கொள்ளவில்லை. எனவே எந்தக் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கடமைப்பட்டது இல்லை. நாங்கள் எங்களுக்கு மட்டுமே கடமைப்பட்டவர்கள்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.