`ஆயிரம் ரூபாய் சென்ட்ரலில் காப்பி குடிக்கக்கூட போதாது' - பாரதிராஜா ஆதங்கம்!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்கள் ஏராளமானோருக்குக் கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. 

இது குறித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையை சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,   ``நீட் தேர்வு முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நீட் தேர்வினை மே 6-ம் தேதி நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலையில், எங்களது பிள்ளைகள் இந்தத் தேர்வினை ராஜஸ்தான், கேரளா, அஸ்ஸாம் ஆகிய வெளிமாநிலங்களில் சென்று எழுத வேண்டும் எனக் கடைசி நிமிடத்தில் அறிவித்திருக்கிறார்கள். தமிழ் பிள்ளைகள் தமிழ் நாட்டில் தேர்வு எழுத விடப்படாதது ஏன் என்று தெரியவில்லை. எங்கள் மாணவர்கள் தேர்ந்தவர்கள். நடுத்தட்டு, அடித்தட்டு மாணவன்  இப்படி வேறு மாநிலங்களுக்குச் செல்ல குறைந்தபட்சம் தாயோ, தந்தையோ ஒருவருடன் செல்ல போக்குவரத்து செலவு, அங்கே தங்கும் செலவு இப்படிப் பல சிக்கல் இருக்கிறது. 

மாணவனின் பொருளாதார அடிப்படையைத் தெரிந்து கொள்ளாமல், அவனை ஒதுக்கணும், ஒரங்கட்டணும் என்ற எண்ணத்துடனேயே இந்த மாதிரி ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளதா அரசு என்று தெரியவில்லை. இந்த மாணவர்களைப் போகாதீர்கள் என்று தடுக்க முடியும். வெளி மாநில மாணவர்களைக் இங்கு வராதீர்கள் என்று தடுத்த நிறுத்த முடியும். ஆனால், எங்கள் போராட்டத்தினால் தகுதியுடைய எங்கள்  மாணவர்கள் தங்கள் இடங்களை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த முறை அவர்கள் நீட் தேர்வு எழுதி வரட்டும். இந்தத் தேர்வுக்கு நாம் போகவில்லையென்றால் நஷ்டம் நமக்குத்தான். நம் மாணவன் இடத்தில் வேறு மாநிலத்தவருக்கு அந்த இடத்தில் உட்காரக் கூடும்.

அதனால், மற்ற மாநிலங்களுக்குச் சென்று வரும் எங்களது மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்த நாளை முதலவர் அல்லது சுகாராத்துதுறை அமைச்சரைச் சந்திக்கவுள்ளோம். அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காப்பிகூட குடிக்கக்கூட போதாது. வசதியில்லாத மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதச் சென்று வரும்வரையில் தேவைப்படும் முழு பொருளாதார உதவியையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும். நீட் தேர்வை இந்தத் தடவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தால்  இதை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று அர்த்தமில்லை. இதற்குப்பிறகு  நீட்டை எதிர்த்து கடுமையாக போராடி நீட் தேர்வினை ரத்து செய்வோம்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!