`காடுவெட்டி குரு உடல்நிலை குறைவுக்கு யார் காரணம்..?' - ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல்

 

குரு

''கேட்டது நீதி... கிடைத்தது சிறை; கந்தக பூமியில் வெந்து மீண்ட நாள்கள்'' என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் தொடர் எழுதி வருகிறார், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 5-வது நாளாக, ''குருவின் இன்றைய நிலைக்குக் காரணமான அன்றைய அடக்குமுறை..!'' என்று உருக்கமாக எழுதியுள்ளார். உடல் நலம் குன்றி சென்னையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டுவரும் குருவை நினைத்து இந்தப் பகுதியை டாக்டர் ராமதஸ் எழுதியுள்ளார். அதில், ''பா.ம.க மீது ஏவப்பட்டது திட்டமிட்ட அடக்குமுறை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் வன்னிய சங்கத் தலைவரும், அப்போதைய பா.ம.க சட்டப்பேரவை கட்சித் தலைவருமான குரு மீது அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள்தான்.

நீதிகேட்டு போராட்டம் நடத்தியதற்காக நான் சிறையில் வாடிய நாள்களைவிட, வன்னியர் சங்கத் தலைவர் குரு முதல் சாதாரண தொண்டன் வரை மொத்தம் 134 பாட்டாளி சொந்தங்கள் குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுதான் என்னை மிகவும் வாட்டியது. இவர்களில் அதிகபட்சமாக, ஜெ.குரு 219 நாள்கள் கொடூரமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அப்போது சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள்தான், இப்போது அவரது நுரையீரலை மிகக்கடுமையாகப் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளன.

விழுப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக நானும், ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகளும் கைதுசெய்யப்பட்டதை சரியான நடவடிக்கை என்று கூறுபவர்களால்கூட, அதன் பின்னர் நடைபெற்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காமல், சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, காரணமே கூறப்படாமல் நான் கைதுசெய்யப்பட்ட நாளான 30.04.2013 அன்று, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் பிணை பெற்று விடுதலையாகிவிடக்கூடாது என்பதற்காக, அடுத்தடுத்து மேலும் 4 வழக்குகளில் அவர் கைதுசெய்யப்பட்டார். அவரை முடக்கும் நோக்குடன் மே மாதம் 10-ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து தமிழக அரசு ஆணையிட்டது.

ராமதாஸ்

குருவைத் தொடர்ந்து, மாவட்ட மாநில நிர்வாகிகள் என 34 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், 101 பேர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். முறையீட்டு மனுக்களை ஆய்வுசெய்த மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருவரை கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகளில் ஒன்றுகூட பாட்டாளி மக்கள் கட்சியினர் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்று கூறி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து ஆணையிட்டது. 

தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மதிக்காமல், தங்கள் மீது இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி, மாரி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில், இந்த வழக்கின் மீதான விசாரணையை நடத்தி முடித்த நீதிபதிகள், பழனி, மாரி ஆகிய இருவரையும் விடுதலைசெய்து தீர்ப்பளித்தனர். 

வன்னியர் சங்கத்தலைவர் ஜெ. குரு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டது செல்லாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில், அவர் மீது மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஜெயலலிதா பாய்ச்சினார். குருவுக்கு எதிராக மட்டும் மொத்தம் 4 முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், குரு விடுதலையாக முடியாத சூழல் உருவானது. குருவின் விடுதலைக்கு எதிராக அ.தி.மு.க அரசு பல்வேறு சதிகளைச் செய்தது.

கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட குருவுக்கு, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டன. கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக, அவரது கால்கள் மரத்துப்போயின. இதற்காக மருத்துவம் அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் முறையீடு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மருத்துவம் வழங்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடுசெய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சிறைத் துறைக்கும் ஆணையிட்டது. ஆனால், இறுதிவரை குருவுக்கு மருத்துவம் அளிக்க சிறைத்துறை முன்வரவில்லை. மாறாக, அவரை காவல் நீட்டிப்பு என்ற பெயரில் சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம், அரியலூர், திட்டக்குடி என பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் கொடுமைப்படுத்தினர். இதனால் குரு கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளானார்.

மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச்சென்று அலைக்கழித்ததுதான் குருவின் உடல்நிலையை மிகக்கடுமையாக பாதித்தது. குருவின் இன்றைய நிலைக்கு ஜெயலலிதாவின் அடக்குமுறையும், பழிவாங்கலும்தான் காரணமாகும்.  தமிழக அரசின் அடக்குமுறைகளை முறியடித்து, குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை செல்லாது என்று 04.12.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திடம் தீர்ப்பு பெற்றோம். 219 நாள்களுக்குப் பிறகு, வன்னியர் சங்கத் தலைவர் குரு விடுதலையானார். இந்தச் செய்திதான் என் இதயத்தை வாட்டிய வலியைப் போக்கியது'' என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!