'அன்று மாறி மாறி மோடியைச் சந்தித்தனர்; இன்று மறுக்கிறார்கள்'-ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்ஸை சாடும் செந்தில்பாலாஜி

"ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்" என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது,
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அதை மத்திய அரசு மதிக்கவில்லை. இன்றுவரை அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு மறுத்துவருகிறது. தமிழக அரசும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் நடக்கும் தேர்தலை கருத்தில்கொண்டு, மத்திய அரசு தமிழகத்தை ஏமாற்றிவருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்திருப்பார். டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் பேச அவரிடம் திறமையும் இல்லை; தைரியமும் இல்லை. காரணம், ஈ.பி.எஸ்,ஓ.பி.எஸ் இருவரின் உறவினர்களும் வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ளனர். அந்த பயத்தில், அவர்கள் மத்திய அரசை தட்டிக் கேட்கவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை டி.டி.வி தலைமையில் தொடர் போராட்டம் நடைபெறும். பிரிந்த இயக்கத்தை இணைப்பதற்காக, பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தொடர்ந்து பிரதமரை மாறி மாறி சந்தித்துவந்தனர். இப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரைப் பார்ப்பதற்கு மறுக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் தமிழகத்துக்குச் செய்கின்ற துரோகம் தெளிவாகத் தெரியும். மத்திய அரசை எந்தக் காலத்திலும் அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு எதிரான விரோத அரசு தமிழகத்தில் ஆட்சி நடத்திவருகிறது. தினகரனின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல், திவாகரன் பேசி வருகிறார். இதுவரை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், திவாகரன் ஆகிய மூன்று பேருக்கும் இடையே இருந்து வந்த ரகசியப் பேச்சுகள், தொடர்புகள், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. திவாகரன் பின்னால் யாரும் செல்லத் தயாராக இல்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!