ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராமதாஸ்!  | Stalin and Ramadoss speak together in Traders Union Meet

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (05/05/2018)

கடைசி தொடர்பு:14:25 (05/05/2018)

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- ராமதாஸ்! 

ஸ்டாலின்- ராமதாஸ்

திருவள்ளூரில் நடைபெற்று வரும் வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க தலைவர் ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருவள்ளூர் மாவட்டம் வேலப்பன் சாவடியில் வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்து வரும் இந்த மாநாட்டில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், ''வணிகர்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் தி.மு.க ஆட்சி பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பலமுனை வரி விதிப்பை ஒருமுனை வரி விதிப்பாக மாற்றியது தி.மு.க ஆட்சியில்தான். 580 பொருள்களுக்கு தி.மு.க ஆட்சியில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் வணிகர்கள் மீது இருமுனைத் தாக்குதல் நடத்துகிறது. வணிகர்களை பணமதிப்பு இழப்பு நடவடிக்கை படுகுழிக்குள் தள்ளியது. ஜி.எஸ்.டி வரியால் சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் வணிகர்களிடம் ஆலோசனை கேட்டு செய்த ஆட்சி தி.மு.க ஆட்சிதான். வணிகர் உரிமையைப்போல் தமிழக அரசின் உரிமையையும் மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

 மு.க.ஸ்டாலின்- ராமதாஸ்

அரசியலில் தி.மு.க-வும் பா.ம.க-வும் எதிரும் புதிருமாக இருக்கிறது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினும் ராமதாஸூம் ஒரே மேடையில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


[X] Close

[X] Close