உடலை தெரு வழியாக எடுத்துச்செல்ல எதிர்ப்பு! கடைகள், பைக், ஆட்டோக்களுக்கு தீ வைப்பு; போர்க்களமான ஊர்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் வெடித்ததால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் கலவ‌ரம்; போலீஸ் குவிப்பு

பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தெரு வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்த காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். முடியாத சூழலில், தேனி நகரத்தில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தற்போது நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் நேரில் ஆய்வு செய்து நிலைமையைக் கேட்டறிந்தார். எரிக்கப்பட்ட வாகனங்கள் கடைகளை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தெருவிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!