வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/05/2018)

கடைசி தொடர்பு:16:35 (05/05/2018)

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.38 குறைக்கலாம்! தா.பாண்டியன் அதிரடி யோசனை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மூத்த தலைவர் தா.பாண்டியன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்

``முகேஷ் அம்பானிக்கு மக்களின் பணத்தை அரசுகள் கொடுக்காமல் இருந்தால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38 ரூபாய் வரை குறையும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அதிரடி யோசனை தெரிவித்தார்.

Pandianதா பாண்டியன்

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வுக்கு விதி விலக்கு வேண்டும் என்று சட்டமன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசும் குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார்களா என்று தெரியவில்லை. நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், பல துறைகளில் நீட் போன்ற தேர்வை திணிப்பதற்கு மத்திய அரசு முயன்றுவருகிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பல மாநிலங்களில் நீட் தேர்வுக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. செல்லும் இடங்களில் அவர்கள் எங்கு தங்குவார்கள். நீட் தேர்வுக்குப் படிப்பார்களா பயணம் செய்வார்களா? இப்படி ஒரு குழப்பத்தை மாணவர் மத்தியில் உருவாக்கியுள்ளனர்.

இந்த நீட் திட்டத்தைக் கைவிடாத வரையில் மீண்டும் உயர் ஜாதி வர்க்கத்தை ஆதிக்கப்படுத்தப் பார்க்கிறது என்ற எண்ணமே தோன்றுகிறது.  மாநில அரசு மீண்டும் தன் கண்டனத்தை அறிவிக்காமல் பயணத்துக்குப் பணம் தருகிறேன் என்று நீட் தேர்வுக்குப் பக்கமேளம் வாசிக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசு பார்க்கும் கொத்தடிமை வேலையை கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்  அந்த வார்த்தை சொல்லப்பட்டதா இல்லையா என்று விவாதம் செய்யக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் ஜி.எஸ்.டி வரியை பெட்ரோலுக்கு விதிக்காமல் தனியார் நிறுவனத்துக்குப் பணத்தை  அள்ளித்தருகிறது. முகேஷ் அம்பானிக்கு மக்களின் பணத்தை அரசுகள் கொடுக்காமல் இருந்தால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38 ரூபாய் வரை குறையும். கறுப்புப்பணம் ஒழிப்பில் மோடி அரசு கடுமையான தோல்வி கண்டது. நோட்டுகள் செல்லாது என்று நொடியில்  அறிவித்த மோடிக்கு காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்கச் சொல்ல நேரம் இல்லையா? இந்தியாவில் தற்போது மோடியின் கண் அசைவில்தான் நீதிமன்றங்கள் செயல்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார்.