``எர்ணாகுளத்துல யாரையும் தெரியாது சார்" - விவசாயி குடும்பத்துக்கு கரம் கொடுத்த விகடன்! | Vikatan helps farmer’'s son to reach Ernakulam for Neet Exam

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (05/05/2018)

கடைசி தொடர்பு:15:58 (05/05/2018)

``எர்ணாகுளத்துல யாரையும் தெரியாது சார்" - விவசாயி குடும்பத்துக்கு கரம் கொடுத்த விகடன்!

சார் நான் தஞ்சாவூர்ல இருந்து பேசறேன். என் பையனுக்கு, எர்ணாகுளத்துல சென்டர் போட்டுருக்காங்க. இப்ப கோயம்புத்தூர் வரைக்கும்தான் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிருக்கு. அங்க இருந்து எப்படி போறது… எங்க தங்கறதுனு தெரியலை உங்களால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா என்று தன் பெயரைக்கூட சொல்லாமல் மிகவும் பதற்றத்துடன் பேசி முடித்தது அந்தக் குரல்.

நாள் 4.5.2018

நேரம் இரவு 9.45

``சார் நான் தஞ்சாவூர்ல இருந்து பேசறேன். என் பையனுக்கு, எர்ணாகுளத்துல சென்டர் போட்டுருக்காங்க. இப்ப கோயம்புத்தூர் வரைக்கும்தான் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிருக்கு. அங்க இருந்து எப்படிப் போறது…? எங்க தங்கறது'னு தெரியலை. உங்களால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று தன் பெயரைகூட சொல்லாமல் மிகவும் பதற்றத்துடன் பேசி முடித்தது அந்த குரல்.

நீட்

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர் துரை அரசு. தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி. அவரது மகன், சற்குணநாதன் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். "கடன உடன வாங்கி பையன படிக்க வெச்சுட்டு இருக்கேன் சார். இவங்க இவ்ளோ தூரத்துல பரீட்சை வெப்பாங்க'னு நான் எதிர்பார்க்கல. இப்போ செம்மொழி எக்ஸ்பிரஸ்ல இருக்கோம். காலை 4.45 மணிக்கு கோவை வந்துடுவோம். அதுக்கப்பறம் என்ன பண்றது'னு தெரியல. நாங்க கோயம்புத்தூர் வரதே இதுதான் முதல் தடவை. இதுல அங்கிருந்து, 200 கி.மீ தூரம் போறத நினைச்சாலே பதற்றமாக இருக்கு. அங்க எங்களுக்கு யாரும் தெரியாது சார்... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" என்றார் துரை அரசு.

இதையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காக கோவையில் இருந்து உதவி செய்துவரும் வழக்கறிஞர் ரஹ்மானை தொடர்பு கொண்டோம். ``ஒண்ணும் பிரச்னை இல்ல. அங்க தங்குவதற்கு ஏற்கெனவே சொல்லி வெச்சுருக்கேன். அவங்கள எர்ணாகுளத்துக்கு கூட்டிட்டு போறது என் பொறுப்பு" என்று நம்பிக்கை கொடுத்தார் ரஹ்மான். இதைக் கேட்டு துரைஅரசும் சற்று நிம்மதியடைந்தார்.

அதிகாலை 4.45 மணி… செம்மொழி ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. சற்குணநாதன் மட்டுமல்ல. அவர்களைப் போல, ஏராளமான மாணவர்கள், எர்ணாகுளம் செல்வதற்காக கோவை வந்திருந்தனர். அதில், விஷாலி என்ற மாணவியும் அடக்கம். தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்திருந்தார் விஷாலி. அவர்களுக்கும் யாரிடம் உதவி கேட்பது என்பதுகூட தெரியவில்லை. இதைத்தொடர்ந்து, துரைஅரசு நம்மை மீண்டும் தொடர்புகொண்டு பேசினார். மீண்டும் ரஹ்மானிடம் பேசினோம். அதே நம்பிக்கையுடன் உறுதியளித்தார். பின்னர், ரயில்வே ஊழியர் சுதா என்பவரின் உதவி மூலம், சற்குணநாதன் மற்றும் விஷாலி குடும்பத்தினர் எர்ணாகுளம் செல்ல, சதாப்தி ரயிலில்  ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் எர்ணாகுளத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

சற்குணநாதன்

சற்குணநாதன்

``திருச்சி, மதுரை, கோவை சென்டர்களுக்குத்தான் நான் விண்ணப்பத்தில் முக்கியத்துவம் கொடுத்திருந்தேன். ஆனால், எர்ணாகுளத்துல சென்டர் போட்டுட்டாங்க. அங்க எப்படி போறதுனு ரொம்ப டென்ஷன். இத நினைச்சு, நினைச்சு நைட் எல்லாம் தூக்கமே வரல" என்றார் சற்குணநாதன்.

``நானும் எர்ணாகுளம் சென்டர தேர்ந்தெடுக்கவே இல்ல. ஆனால், எனக்கு அந்த சென்டர்ல கொடுத்துருக்காங்க. ரிவிஷன்கூட பண்ண முடியல. ட்ரெய்ன் லேட்டாக… லேட்டாக டென்ஷன் அதிகமாகுது. எப்படா எக்ஸாம் எழுதி முடிப்போம்'னு இருக்கு" என்றார் விஷாலி 

``ரெண்டு லேடீஸ வெச்சுட்டு மொழி தெரியாத ஊருக்கு போறத நினைச்சாலே கஷ்டமா இருக்கு. எல்லா இடத்துலயும் இவங்கள வெச்சுட்டு காத்திட்டு இருக்க ரொம்பவே தர்மசங்கடம் ஆகுதுங்க" என்கிறார் விஷாலியின் தந்தை சுபாஷ். அவரும் ஒரு விவசாயிதான்.

எர்ணாகுளத்துக்குச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தாம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எர்ணாகுளம் ரயில் நிலையம் அருகிலேயே 40 ரூம்களை ஏற்பாடு செய்துள்ளார்.

 விஷாலி

விஷாலி

ரஹ்மான்"நீட் என்பது தமிழகத்துக்கு தேவையே இல்லை. அது தமிழக மாணவர்களின் உரிமையைப் பாதிக்கும் செயல். தமிழகத்தில்தான் அதிகளவு மருத்துவர்கள் உருவாகின்றனர். இங்கிருந்து வட இந்தியாவுக்கு சென்று மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அங்கிருந்துதான் இங்கு வந்து மருத்துவம் படிக்கின்றனர். தமிழகத்தில் உருவாகும் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகத்தான் இந்தப் பலி வாங்கும் நடவடிக்கையை எடுக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல், இந்தத் தேர்வு OMR  ஷீட் வடிவில் நடக்கிறது. இதை எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதலாம். இதற்காக, இவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமென்பதில்லை. இதற்கு முறையான ஏற்பாடுகளை செய்யாத சி.பி.எஸ்.இ நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம். இது இப்படியே தொடர்ந்தால், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. ஜல்லிக்கட்டுக்கு நடந்ததுபோல, மிகப்பெரிய தன்னெழுச்சி போராட்டம் நடந்தால்தான் மாற்றம் ஏற்படும்" என்கிறார் வழக்கறிஞர் ரஹ்மான்.