தி.மு.க பிரமுகரால் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலருக்கு நேர்ந்த கொடூரம்!

ஒப்பந்தம் எடுக்கும் பிரச்னையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர், திமுக முன்னாள் கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட்ட அணைக்கட்டுப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒப்பந்தம் எடுப்பதில் டி.சி.குப்பத்தைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர் மகேந்திரன் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க கவுன்சிலர் மணிமாறன் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், கிராமங்களில் சாலை அமைப்பது, குடிநீர் குழாய்கள் அமைப்பது, ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, அரசு கட்டடங்கள் கட்டுவது போன்ற வேலைக்கு ஒப்பந்தம் செய்து, பணி செய்து வந்தவர்கள்.

இன்று, ஒப்பந்தம் எடுக்கும் விஷயமாக மகேந்திரன் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து அங்குள்ள அலுவலரிடம் ஒப்பந்தம் குறித்து பேசியுள்ளார். ஒப்பந்தம் குறித்து பேசவந்துள்ளது தெரிந்து, மணிமாறன் கடுங்கோபத்தில் அலுவலகத்துக்கு வந்து மகேந்திரனை கத்தியால் தலை மற்றும் கழுத்தில் பயங்கரமாக வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து விழுந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அணைக்கட்டுப் போலீஸார், தப்பியோடிவர்களை வலைவீசி தேடினர்.

இதனிடையே, மகேந்திரனை கொலை செய்து விட்டு காரில் தப்பமுயன்ற மணிமாறன், ராமமூர்த்தி, கோபி, அசோகன், கார்த்தி ஆகிய 5 பேரை  வாணியம்பாடி ஆலங்காயம் பகுதியில் போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தற்போது ஆலாங்காயம் பகுதியில் இருந்து பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் காவல்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

ஒப்பந்தத்துக்காக முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலரை, முன்னாள் தி.மு.க கவுன்சிலர் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!