வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/05/2018)

கடைசி தொடர்பு:18:00 (05/05/2018)

'நாங்கள் கத்துவது உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?' - மணல்குவாரிக்கு எதிராக சீறும் வணிகர்கள்

``அரசியல்வாதிகளே, அதிகாரிகளே, மணல்குவாரி அமைக்கக்கூடாது என்று நாங்கள் கத்துவது உங்களது காதுகளில் கேட்கவில்லையா?'' என்று கொந்தளித்த வணிகர்கள், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியப் பகுதியில் திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டியவாறு கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இந்தக் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்துவிட்டது.

இந்நிலையில், திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் கடந்த ஒரு மாதமாக ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், 36 கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைக் கண்டித்தும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் திருமானூர் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.