வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (05/05/2018)

தமிழக அரசியலில் மாண்பை மீட்டெடுக்க வேண்டும்..! கமல்ஹாசன்

தமிழக அரசியலில் இழந்த மாண்பை மீட்டெடுக்கவே அரசியலில் ஈடுபடுகிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது வணிகர் தினம், இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடாக சென்னை வேலப்பன்சாவடியில் இன்று தொடங்கியது. ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய கமல்ஹாசன், `மக்கள் நீதி மய்யம் நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில் வணிகர்கள் பங்கேற்கவேண்டும். கிராம சபை என்பது நான் உருவாக்கியது அல்ல. நான் நினைவுபடுத்தியது. வணிகர்களுக்கு ஏற்றத் திட்டங்களையும் மக்கள் நீதி மய்யம் உருவாக்கும். மக்களுக்கு இடையூறின்றி போராட்டம் நடத்தவேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை. தமிழக அரசியலில் இழந்த மாண்பை மீட்டெடுக்கவேண்டும். தமிழகத்தை நல்ல நிலைக்குக் கொண்டு செல்வதை நினைவுபடுத்தவே இந்த இடத்துக்கு வந்தேன். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் வணிகத்துறையும் இணைவது அவசியம். நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள். தேவையில்லாமல் கடையடைப்பு இல்லை என்பதை பாராட்டுகிறேன்' என்று பேசினார்.