அரசு மரியாதையுடன் கப்பல்படை வீரர் ராகேஷ் குமாரின் உடல் தகனம்! | Navy soilder rakesh kumar's body cremated with full military honours

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (05/05/2018)

கடைசி தொடர்பு:22:15 (05/05/2018)

அரசு மரியாதையுடன் கப்பல்படை வீரர் ராகேஷ் குமாரின் உடல் தகனம்!

கப்பல்படை வீரர் ராகேஷ்குமார்

காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் பெண் கேட்கச் சென்ற கப்பல்படை வீரர் ராகேஷ் குமார் தீக்குளித்து உயிரிழந்தார். அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அ.தி.மு.க நகரச் செயலாளர் சௌந்தரராஜன் என்பவரின் இரண்டாவது மகள் அஸ்வினி. இவர், அரக்கோணம் அருகேயுள்ள புளியமங்களம் பகுதியைச் சேர்ந்த கப்பல்படை வீரர் ராகேஷ் குமாரைக் காதலித்து வந்தார். இதனிடையே, அஸ்வினிக்குக் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இந்தச் செய்தி கேள்விப்பட்டு ராகேஷ் குமார் அவரது குடும்பத்தினருடன் கடந்த 29ம் தேதி திருத்தணியில் உள்ள அஸ்வினி வீட்டுக்குப் பெண் கேட்கச் சென்றுள்ளார். 

அப்போது வீட்டில் இருந்த செளந்தரராஜன், அவர்களிடம் எதற்காக வந்தீர்கள் எனக் கேட்டுள்ளார். `நானும் அஸ்வினியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம்’ என்று ராகேஷ் குமார் கூறியிருக்கிறார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் வேதனையடைந்த ராகேஷ்குமார் தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராகேஷ் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான புளியமங்களத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராகேஷ் குமார் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராகேஷ்குமார் உடலுக்கு கப்பல்படை வீரர்கள் மரியாதை

பின்னர் உடல் அங்குள்ள இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கேப்டன் லலீத்குமார் தலைமையில் கப்பல்படை மற்றும் விமானப்படை வீரர்கள் தாங்கள் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி இரண்டு நிமிடம் மெளனமாக இருந்து ராகேஷ் குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேப்டன் லலீத்குமார் தனது தொப்பியைக் கழற்றி சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ராகேஷ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.