வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (05/05/2018)

கடைசி தொடர்பு:18:38 (05/05/2018)

``ஐயா...நியூட்ரினோ தெரியும் கண்களுக்கு, நாங்கள் தெரியவில்லையா?" -பொட்டிபுரம் மக்களின் கடிதம்!

ஆரம்பம் முதலே நியூட்ரினோ திட்டத்தில் இருக்கும் மிக முக்கியப் பிரச்னை அரசின் வெளிப்படைத்தன்மை இல்லாமைதான்.

``ஐயா...நியூட்ரினோ தெரியும் கண்களுக்கு, நாங்கள் தெரியவில்லையா?

ஆண்டுகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஆட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், மக்களின் போராட்டக் குரல் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் இன்னும், இன்னும் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டேதானிருக்கிறது. நியூட்ரினோ குறித்து எவ்வளவோ பேசியாகிவிட்டது. விவாதங்களை நிகழ்த்தியாகிவிட்டது. எதிர்ப்புகளைப் பதிவு செய்தாகிவிட்டது. ஆனால், அரசும் அதைக் கைவிடுவதாக இல்லை. மக்களும் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

நியூட்ரினோ - தேனி - பொட்டிபுரம்

தேனி பொட்டிபுரம் மக்களுக்கு ஐ.என்.ஓ. விஞ்ஞானிகள் பொட்டிபுரம் மக்களுக்குச் சமீபத்தில் ஒரு கடிதம் எழுதினர். 

``அறிவியல் துறையில் நம் தேசத்தைப் பெருமைப்படுத்தும் ஒரு திட்டம் இந்த நியூட்ரினோ. இந்த ஆராய்ச்சியின் வெற்றி, நம் தேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பெரும் சாதனையாக அமையும். இந்தத் திட்டத்தை மக்கள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்." என்பதை முக்கிய சாராம்சமாகக் கொண்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

தேனி மக்களுக்கு விஞ்ஞானிகள் கடிதம்

டெல்லி, அலகாபாத், பெங்களூரூ ஆகிய மூன்று நகரங்களிலிருக்கும் தேசிய அறிவியல் மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். 

நியூட்ரினோ ஆய்வில் ஈடுபட்டு, அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்ட விஞ்ஞானிகளுக்குத் தேனி பொட்டிபுரம் பஞ்சாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் உருக்கமான ஒரு பதில் கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் இதுவரை முறையாக பதிலளிக்கப்படாத கேள்விகளையும் ஐ.என்.ஓவிற்கு அவர்கள் முன்வைத்துள்ளனர். 

நியூட்ரினோ குறித்த முழுமையான வரலாற்றையும், பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். 

``பொட்டிபுரம் பஞ்சாயத்தில் வாழும் நாங்கள், இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இடம், நேரடியாக எங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே, அது பற்றி மரியாதைக்குரிய விஞ்ஞானிகளாகிய உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

உங்கள் ஆய்வுத் திட்டத்தின் விண்ணப்பத்தை, தமிழகச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு நிபுணர்கள் ஏன் நிராகரித்தார்கள் என்று தெரியுமா? நீங்கள் ஆய்வகம் அமைக்கவிருக்கும் அம்பரப்பர் மலையைப் பற்றியும், அதன் சுற்றுப்புறங்கள் பற்றியும் அந்த நிபுணர்கள் கூறியதை ஒருவேளை நீங்கள் மறந்திருக்கலாம்! எனவே அந்த விவரங்களை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

1. ``மிகக் கடினமான பாறையில் சுரங்கம் தோண்டுவதற்கு, உயர்திறனுடைய வெடி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மேலும் அதிலிருந்து சுமார் 6 லட்சம் கன மீட்டர் அளவுக்குப் பாறைக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்!”

2.  ``சுரங்கம் அமையும் மலை தரைமட்டத்திலிருந்து 1,485 மீட்டர் உயரமுடையது. இவ்வளவு ஆழத்தில் சுரங்கம் தோண்டும்போது பாறையின் கீழ் நோக்கிய அழுத்தம், ஒரு சதுர மீட்டருக்கு 270 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும்! இதனால் சுரங்கத்தின் உள்பகுதியில் பாறைவெடிப்பு மற்றும் உள்புறச் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். இந்த ஆபத்தைத் தவிர்ப்பதற்கான புவியியல் தொழில்நுட்ப அறிக்கை எதுவும் உங்கள் விண்ணப்பத்தில் இல்லை.”

3.  ``ஆய்வகம் அமைய உள்ள இடம், சர்வதேச அளவில் `பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வருகிறது. மேலும், இம்மலைப் பகுதி அரிய வகை தாவரங்கள், பறவைகள், பாலூட்டிகள் மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த  மூலிகைகள் ஆகியவற்றின் புகலிடமாக விளங்குகிறது!”

4. அம்பரப்பர் மலையில் நீங்கள் உருவாக்கவிருக்கும் நியூட்ரினோ ஆய்வக வேலைகளால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஆபத்துகளையும் மேற்கண்ட நிபுணர்கள் குழு அறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. தவிர, நீங்களே நியமித்த தகுதியற்ற நிறுவனமான சலீம் அலி ஃபவுண்டேஷன் தனது அறிக்கையில், ``வெடிமருந்துகளால் பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால், அருகிலுள்ள சுற்றுப்புறப் பகுதிகளிலும், அதன் புவியியல் அமைப்பிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபற்றி நாங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.” என்று கூறுகிறது!

தேனி                                         தேனி

 

மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளே...,

சுற்றுச்சூழல் ஆய்வு செய்யவேண்டிய அவசியத்துக்கு, இதைவிட வேறு என்ன காரணங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
ஒன்று, தகுதியற்ற நிறுவனத்தை வைத்து ஆய்வுசெய்கிறீர்கள் அல்லது சுற்றுச்சூழல் ஆய்வே செய்யாமல் ஓடி ஒளிகிறீர்களே. ஏன்?
எங்களுக்குத் தீமை விளைவிக்கும் ஏதோ ஒன்றை மூடி மறைக்கப் பார்க்கிறீர்கள் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்!
கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவுக்காக இவ்வளவு சிரமப்படும் நீங்கள், கண்முன்னே உள்ள எங்கள் பிரச்னைகளைத் திரும்பிக்கூட பார்க்க மறுப்பது ஏன்? " என்பதோடு சேர்த்து நியூட்ரினோ திட்டம் குறித்த இன்னும் பல கேள்விகளை மக்கள் கேட்டுள்ளனர். கடிதத்தின் இறுதியில் விஞ்ஞானிகளுக்கு உருக்கமான ஒரு வேண்டுகோளையும் அவர்கள் விடுத்துள்ளனர். 

``அய்யா. நாங்கள் வன்முறையற்ற அமைதி வழியைப் பின்பற்றுகிறவர்கள். அடிப்படையில் இந்தியா ஓர் ஜனநாயக நாடு என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள். விஞ்ஞானிகளாகிய நீங்களும் இதற்கு எதிரானவர்கள் அல்ல என்று நம்புகிறோம்! எங்களுக்கு உடன்பாடு இல்லாத ஒரு திட்டத்தை, எங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கும் திட்டத்தை, எங்களிடம் ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் கூட நடத்தாமல், எங்கள் மீது திணிப்பது அநீதியானது என்று கருதுகிறோம்! விஞ்ஞானிகளாகிய நீங்கள் அறிவியல் என்ற பெயரில், எங்களின் இயற்கை வளங்களை அழிக்க நினைக்கிறீர்கள். நாங்களோ அதைப் புனிதமாகக் கருதி காப்பாற்ற முயற்சி செய்கிறோம்! இந்த ஜனநாயக நாட்டில் எங்களை அமைதியாக வாழ அனுமதியுங்கள்!

அனைத்து விஞ்ஞானிகளும் நீண்ட ஆயுளும் அர்த்தமுள்ள வாழ்வும் பெற தேனி மாவட்ட மக்களின் சார்பாக வாழ்த்துகிறோம்!" என்ற கோரிக்கையோடு பொட்டிபுரம் மக்களின் கடிதம் முடிகிறது. 

தேனி நியூட்ரினோ ஆய்வு

ஆரம்பம் முதலே நியூட்ரினோ திட்டத்தில் இருக்கும் மிக முக்கியப் பிரச்னை அரசின் வெளிப்படைத்தன்மை இல்லாமைதான். மக்களின் கேள்விகளுக்கும், சூழலியலாளர்களின் கேள்விகளுக்கும் இதுவரை நேரடியான பதிலை அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்