`கடம்பூர் ராஜூ அப்படிப் பேசியிருக்கக் கூடாது!’ - தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவேசம் | DMK MLA Geetha Jeevan slams Minister Kadambur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (05/05/2018)

கடைசி தொடர்பு:22:03 (05/05/2018)

`கடம்பூர் ராஜூ அப்படிப் பேசியிருக்கக் கூடாது!’ - தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவேசம்

``என்னை அரைவேக்காடு என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவர் சொன்ன வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால்,  தி.மு.க., மகளிர் அணியினர் அவர் மீது கல் எறிவார்கள்." எனத் தூத்துக்குடி தொகுதி தி.மு.க,  எம்.எல்.ஏ கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன்

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கீதா ஜீவன், `கோவில்பட்டியில் 2-வது குடிநீர்த் திட்டப்பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இந்தநிலையில், அந்த திட்டத்தை தொடங்கிவைக்க மே 11-ம் தேதி கோவில்பட்டிக்கு வரும் முதல்வர் பழனிசாமிக்கு, தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இன்று தூத்துக்குடி அ.தி.மு.க., அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``கோவில்பட்டி இரண்டாவது பைப்லைன் திட்டத்தை கடந்த 2006-2011 வரை அமைச்சராக கீதாஜீவன் இருந்த போது, இத் திட்டத்தை செயல்படுத்துவேன் எனச் சொல்லி, அரசியலுக்காக இத்திட்டத்தை பயன்படுத்தினாரே தவிர, செயல்படுத்தவில்லை.

ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ல் அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குப் பின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. ஆனால், கீதாஜீவன் இன்று அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வந்தால் அவரை அழைத்துச் சென்று திட்டப் பணிகளைக் காட்ட தயாராக இருக்கிறேன். யாருடைய பேச்சையோ கேட்டு சிறுபிள்ளைத் தனமாகப் பணிகள் முடியவில்லை என்று திட்டத்தை தொடங்கி வைக்க வரும் முதல்வருக்குக் கறுப்புக் கொடி காட்டப் போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தச் சலசலப்புக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது. அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்."என்றார்.

இதையடுத்து இன்று கலைஞர் அரங்கத்தில் எம்.எல்.ஏ கீதாஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``திட்டப் பணிகள் முழுமையாக முடிவடையாமல் தொடங்கி வைக்க உள்ளதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு எடுக்கப்பட்டது. கோவில்பட்டியில் இந்தத் திட்டத்தில் மொத்தம் உள்ள 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 3 தொட்டிகள் கட்டி முடிக்கப்படவில்லை. குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் அமைக்க இதுவரை யாருக்கும் டென்டர் கொடுக்கப்படவில்லை. இது உண்மையா? இல்லையா? என்று அமைச்சர் செல்ல வேண்டும். எனவே, அரைவேக்காட்டுத்தனம் என்று என்னைப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வார்த்தையை அவர் வாபஸ் பெற வேண்டும். பெண் என்ற முறையில் என்னை உதாசினப்படுத்தி, இழிவாகப் பேசியதை மீண்டும் கண்டிக்கிறேன். அவர் ஆசிரியர் என்றால் நான் முதுகலை பட்டதாரி ஆசிரியர். உறுதியாக கடம்பூர் ராஜூ இங்கு வரும் போது திமுக மகளிர் அணியினர் அவர் மீது கல் எறிவார்கள்" என்று முடித்தார் ஆவேசமாக.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க