”எஸ்.வி.சேகரை கைது செய்யாததன் காரணத்தை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்” -ஜி.கே.வாசன்

 பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன்
 

கீழக்கரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ஜி.கே.வாசன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ''நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசின் பிடிவாதத்தால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே தமிழகத்தில் மாணவ, மாணவியர்கள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இத்தேர்வினை எத்தனைப் பேர் எழுதுகிறார்கள் என்ற விபரத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிடவில்லை. தமிழக மாணவர்கள் கேரளம், ராஜஸ்தான் என வெளிமாநிலங்களில் போய் நீட் தேர்வு எழுதுவதால் பொருளாதாரச் செலவுகள்,அம்மாநில மொழி தெரியாமை, போதுமான பாதுகாப்பின்மை, பெற்றோர்களும், மாணவர்களுக்கும் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் என பல்வேறு அவதிகளுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதற்கு அதிகாரிகள் பொறுப்பா அல்லது ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பொறுப்பா என்பதை தெரியப்படுத்திட வேண்டும். அயல் நாடுகளில் எழுத வேண்டிய தேர்வைக் கூட சென்னையில் எழுதும் காலம் நடந்து கொண்டிருக்கும் போது தமிழக மாணவர்களை வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம் எனப் பல தனியார் அமைப்புகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அரசு செய்ய வேண்டிய வேலையைத் தனியார் அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. மாநில அரசு மத்திய அரசை தட்டிக் கேட்கத் தயங்குகிறது. தமிழகத்தில் அதிகமான மருத்துவர்கள் உருவாகி விடக்கூடாது என மத்திய அரசு கருதுவதாக பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். அதனால் தான் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு செய்து வருகிறது. அதனை தட்டிகேட்க முடியாத நிலையில் தமிழக அரசு பலவீனமாக செயல்படுகிறது என்றே தெரிய வருகிறது.

இலங்கை கடற்படையால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 174 படகுகள் பல ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் அனைத்தும் சேதமாகி விட்டன. இப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவே இல்லை. ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் தொடங்கும் வரையாவது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 88 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களை நம்பி 15 ஆயிரம் நெசவாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கைத்தறித் தொழில் ராமநாதபுரத்தில் நலியும் நிலைக்கு வந்து விட்டது'' என்றார். 

பேட்டியின் போது த.மா.கா.(கிழக்கு)மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி,முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராம்பிரபு, ராம்பாபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!