வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (06/05/2018)

கடைசி தொடர்பு:07:30 (06/05/2018)

''ஜிகாதி மனநிலையில் சித்தராமையா அரசு செயல்படுகிறது..!'' யோகி ஆதித்யநாத் அதிரடி

யோகி ஆதித்யாநாத்

கர்நாடக தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. மோடி, அமித் ஷா, ராகுல்காந்தி, யோகி ஆதித்யநாத் என்று பல வி.ஐ.பி-கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். பி.ஜே.பி-காங்கிரஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்கள். இப்போது கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் முக்கிய தலைவர்களில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பேச்சு, கர்நாடகாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில், ''சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஜிகாதி மனநிலையில் செயல்படுகிறது. இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 23 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். கர்நாடக அரசு, மக்களை பிரித்தாளும் கொள்கையை கடைபிடிகிறது. இங்கு, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மை மக்களை மட்டுமல்ல, இந்து மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதை சித்தராமையா அரசு மறந்து விட்டது' என்று கர்வார் மாவட்டம் சிர்சியில் யோகி ஆதித்யநாத் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் அவர் பேசுகையில், ''பிரித்தாளும் கொள்கை மூலம் பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் துணை போகிறது. இத்தகைய செயல்களில் இருந்து மக்களை பாதுகாக்கவே நான் வந்துள்ளேன். இங்கு, மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அராஜகத்துக்கு துணையாக இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார் சித்தராமையா. இது அவரது அலட்சியத்தையே காட்டுகிறது. தன்னிச்சையாக செயல்படும் காங்கிரஸ் அரசுக்கு முடிவு கட்ட வேண்டும். காங்கிரஸ் அல்லாத கர்நாடகத்தை உருவாக்கவே இங்கு வந்துள்ளேன். ஜிகாதி மனநிலையில் செயல்படும் காங்கிரஸ் அரசை அகற்ற கர்நாடக மக்கள் உறுதி ஏற்க வேண்டும். ராமர் வனவாசகம் சென்ற போது, தென்னியாந்தியாவில்தான் விசுவாசமிக்க பக்தரான ஆஞ்சநேயரை கண்டார். ராமராஜ்யம் பரவ, ஆஞ்சநேயர் காரணமாக இருந்தார். இந்தியா ஒருங்கிணைந்த நாடு. ஒரே நாடு. சிறந்த நாடு என்பதை பி.ஜே.பி தலைமையில் சாதித்து காட்டுவோம்'' என்று பேசினார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க