தோல்வி பயத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து..! அ.தி.மு.க மீது குற்றச்சாட்டு | Tamilnadu cooperative societies election cancelled because of admk fear of failure - Marxist Communist blame on admk

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (06/05/2018)

கடைசி தொடர்பு:09:40 (06/05/2018)

தோல்வி பயத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து..! அ.தி.மு.க மீது குற்றச்சாட்டு

தோல்வி பயத்தில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஆளும்கட்சியான அதிமுக மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கூட்டுறவு சங்கம் தேர்தல்

தேர்தல் நடைபெறாமலேயே இயக்குநர்களாகிவிட வேண்டுமென்ற ஆளும் கட்சி வேட்பாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்திடும் அறிவிப்பாகவே ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி, போக்குவரத்து, இளங்கோ கூட்டுறவு நாணய சங்கம் உள்ளிட்ட சில கூட்டுறவு சங்கத் தேர்தல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கண்டித்துள்ளது. 

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட்  வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆணைப்படி ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி, போக்குவரத்து, இளங்கோ கூட்டுறவு நாணய சங்கம் உள்ளிட்ட சில கூட்டுறவு சங்கத் தேர்தல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி, தேர்தல் ரத்து அறிவிப்பு வெளிவரும் வரை சட்டம் ஒழுங்கு மிக மிக அமைதியாகவே இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானதாகவும், சட்டத்திற்கு புறம்பானதாகவும் உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் அறிவிப்பு நாள் முதல், வாக்காளர் பட்டியல் வெளியிட்ட நாள், வாக்காளர் பட்டியல் இறுதி செய்திட்ட நாள், வேட்புமனு தாக்கல் நாள், வேட்பு மனு திரும்பப் பெறுதல், இறுதிப் பட்டியல் அறிவித்தது வரை அனைத்து நடைமுறைகளும், சிறு அசம்பாவித அறிகுறிகளும் இல்லாமல் அமைதியாகவே நடைபெற்றது. மேற்கண்ட காலகட்டத்தில் காவல் நிலையத்தில் தேர்தல் சம்மந்தமான எவ்வித புகாரோ, முதல் தகவல் அறிக்கையோ பதியப்படவில்லை. இவ்வளவு அமைதியாக நடைபெற்று வந்த தேர்தல் நடைமுறைகளை சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று முற்றிலும் உண்மையற்ற ஆதாரப்பூர்வமற்ற தகவல்களைக் குறிப்பிட்டு தேர்தலின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்திருப்பது நியாயமற்றது மட்டுமல்ல, இந்த செயல்முறை ஜனநாயக விரோத அறிவிக்கையாகவே உள்ளது.

ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், சட்டப்பூர்வமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திட தேர்தல் ஆணையமோ, கூட்டுறவு சங்க அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், தேர்தலை ரத்து செய்வது பொருத்தமற்ற நடவடிக்கையாகும். ஆளும் கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களின் தூண்டுதலாலும், தேர்தல் நடைபெறாமலேயே இயக்குநர்களாகிவிட வேண்டுமென்ற ஆளும் கட்சி வேட்பாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்திடும் அறிவிப்பாகவே இந்த ரத்து ஆணை அமைந்திருக்கிறது. இத்தகைய செயல் ஜனநாயக நெறிமுறைகளையும், கூட்டுறவின் நோக்கத்தையும் சீரழித்துவிடும். எனவே, கூட்டுறவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அனைத்து தேர்தல் நடவடிக்கையும் ரத்து என்கிற ஆணையினை உடனடியாக திரும்ப பெற்று, ஜனநாயகப் பூர்வமாக வாக்குப் பதிவினை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க