வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (06/05/2018)

கடைசி தொடர்பு:10:29 (06/05/2018)

கேரளாவில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உதவிய தேர்வு மைய அதிகாரிகள்..!

நீட் தேர்வுக்கான கேரள மையங்களில் தமிழக மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. மாணவர்களுக்கு தேர்வு மைய அதிகாரிகள் உதவிகளைச் செய்தார்கள்.

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோரும் பெரும் அதிருப்தி அடைந்தனர். மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் பல்வேறு தனியார் அமைப்பினரும் உதவிகளைச் செய்ய முன்வந்தார்கள்.

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயிலின் நேரம் நீட் எழுதும் மாணவர்களுக்காக மாற்றப்பட்டது. அதனால் மாணவர்களும் பெற்றோரும் உரிய நேரத்துக்கு தேர்வு மையம் செல்ல முடிந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உடைகள் குறித்து பல்வேறு செய்திகள் பரவின. மாணவர்கள் காலர் வைத்த சட்டை அணியக்கூடாது என்றும், பாக்கெட்டுகள் ஜிப் உள்ள பேண்ட் அணியக்கூடாது எனவும் தகவல் பரவியதால், ஆங்காங்கே கிடைத்த வெள்ளை நிற டிராக் பேண்ட், வெள்ளை அல்லது வெளிர் நிற டி-ஷர்ட்டுகளை வாங்க கூட்டம் அலைமோதியது. அதே போல மாணவிகளுகான உடைகள் வாங்கவும் கூட்டம் அதிகம் இருந்தது.

ஆனால், கேரளாவில் உள்ள சில தேர்வு மையங்களில் ஏ.பி.வி.பி சார்பில் ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் தேவையான உதவிகளைச் செய்தனர். அத்துடன், ஹேர் கிளிப், துப்பட்டா, கர்சீஃப், கைக்கடிகாரம், தாயத்துகள்.போன்றவற்றை அகற்ற உதவினார்கள்.

அத்துடன், மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுடன் போட்டோ எடுத்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்ட போதிலும், ஒரு சில மாணவர்கள் கவனக் குறைவுடன் எடுத்து வரவில்லை. அவர்களுக்கு அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொடுக்கவும் உதவிகள் செய்தனர். அத்துடன் தேர்வு மைய வாயிலில் தமிழ் தெரிந்தவர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர் அதனால் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு அறைக்கு சென்றனர்.

அதேநேரத்தில் பல மாணவர்களும் பெற்றோர்களும் உரிய உதவிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர். தேர்வு மையத்தின் அருகில் குடிப்பதற்கு நீர் கிடைக்கவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். தேர்வு மையங்களை கண்டுபிடிக்க முடியாததால் மன உளச்சல் அடைந்ததாகவும், பதற்றமடைந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.