ஹால் டிக்கெட்டில் குளறுபடி - மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு | NEET- Selam student refused to write the NEET exam

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (06/05/2018)

கடைசி தொடர்பு:12:20 (06/05/2018)

ஹால் டிக்கெட்டில் குளறுபடி - மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

சேலத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் ஹால் டிக்கெட்டில் இரு மையங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்த மாணவிக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

நீட்

கோப்புப்படம்

இந்தியா முழுவதும் இன்று சுமார் 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பேர் எழுதுகின்றனர். முன்னதாக தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து இன்று காலை ஒரு வழியாக மாணவர்கள் அவர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்றனர். அங்குப் பலத்த சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வேறு இடங்களுக்கு சென்ற பதற்றத்துடனும், தேர்வு பயத்துடனும் மாணவர்கள் தேர்வு அறையினுள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சேலம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு இரண்டு தேர்வு மையங்கள் குறித்த விவரத்துடன் ஹால் டிக்கெட் வந்துள்ளது. அந்த மாணவி, கொண்டலம்பட்டி சவுடேஸ்வர் தனியார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த அதிகாரிகள் இந்த மையத்தில் உங்கள் பெயர் இல்லை என கூறிவிட்டனர். செய்வதறியாமல் தவித்தார். பிறகு மாணவியின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த போது அதில் இரண்டு தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில் சவுடேஸ்வரி தனியார் கல்லூரியிலும், சேலம் கோட்டை பள்ளி என இரு மையங்கள் இருந்துள்ளன. 

காலை 9:30 மணிக்குள் அனைத்து மையங்களும் மூடப்பட்டு அதன் பின் ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜீவிதா சவுடேஸ்வரி கல்லுரியில் இருந்த போதே மணி 9:30-யை நெருங்கி விட்டது. அதன் பிறகு வேறு மையத்துக்கு சென்றால் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என கருதி மாணவி அங்கு செல்லவில்லை. ஜீவிதாவை தேர்வு எழுத அனுமதிக்கும் படி பெற்றோர்கள் கேட்டும் எந்தப் பயனும் இல்லை. அதன் பின் ஹால் டிக்கெட்டில் இருந்த தவறுக்கு மாணவி என்ன செய்வார் அவரை உள்ளே அனுமதிக்க வேண்டும் என அனைத்து பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சவுடெஸ்வரி கல்லூரியில் வாயிலில் சிறிது பதற்றம் நிலவியது. 

இது குறித்து விளக்கம் அளித்த சி.பி.எஸ்.இ அதிகாரி, 'ஹால் டிக்கெட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்காது. மாணவி கொண்டுவந்தது போலியான ஹால் டிக்கெட்டாக இருந்திருக்கக் கூடும். இது போன்று வேறு எந்த மையத்தில் இருந்தும் எங்களுக்கு புகார் வரவில்லை' என தெரிவித்தார்.