வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (06/05/2018)

கடைசி தொடர்பு:13:52 (06/05/2018)

நீட் தேர்வு எழுத மாணவனுக்கு துணைக்குச் சென்ற தந்தை கேரளாவில் மரணம்..! தகவல் தெரியாமல் தேர்வு எழுதும் மகன்

நீட் தேர்வுக்காக மகனை அழைத்துக் கொண்டு கேரளாவின் எர்ணாகுளம் சென்றிருந்த தந்தை மாரணடைப்பால் மரணம் அடைந்தார். அதனை அறியாத மாணவன் நீட் தேர்வு எழுதி வருகிறார்.

மாணவன் தேர்வு எழுதும் பள்ளி

பெரும் சர்ச்சைக்கு இடையே தமிழக மாணவர்களில் பலர் கேரளாவின் எர்ணாகுளம், பத்தனம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் நீட் தேர்வு எழுதி வருகிறார்கள். எர்ணாகுளத்திலுள்ள 8 மையங்களில் தேர்வு நடைபெற்றுவருகிறது.  

எர்ணாகுளம் நகரில் உள்ள பெரும்பாலான தேர்வு மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு கேரளாவுக்கு வந்து தேர்வு எழுதி வருகின்றனர். 17 வயது சிறுவர்களை தனியாக மொழி தெரியாத இடத்துக்கு அனுப்பமுடியாது என்பதால், மாணவர்களுடன் பெற்றோரும் உடன் வந்திருக்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு எர்ணாகுளத்தின் நாலந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவருக்கு துணையாக தந்தை கிருஷ்ணசாமி வந்திருந்தார். மகன், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது, ஓய்வு எடுப்பதற்காக விடுதி அறைக்கு கிருஷ்ணசாமி சென்றிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

மகனை நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு அழைத்து வந்த தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை உயிரிழந்த தகவல், தேர்வு எழுதிவரும் கஸ்தூரி மகாலிங்கத்திடம் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவர் தேர்வு எழுதி வருகிறார். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை கொச்சின் மாவட்ட கலெக்டரான முகமது ஒய்.சபீருல்லா மேற்கொண்டு வருகிறார்.