காலந்தோறும் கருப்பர் நகரம்..! முனைவர் பட்டம் பெற்ற தஞ்சை எஸ்.பி

தஞ்சை எஸ்.பி.செந்தில்குமார்

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, சேப்பாக்கத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. ஆளுநரும் பல்கலைக் கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துரைசாமி வரவேற்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்திப் பேசினார். முன்னதாக அவர், 10 பேருக்கு மட்டுமே பட்டம் வழங்கினார். மற்றவர்களுக்கு துணைவேந்தர் துரைசாமி பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் நேரடியாக பட்டம் மற்றும் பதக்கம் பெற்றவர்கள் எண்ணிக்கை 582 ஆகும். தமிழ்ச்செல்வி, கல்பனா வெங்கடேசலு ஆகியோர் டி.லிட் என்ற மிக உயரிய பட்டத்துக்கான சான்றிதழ்களைப் பெற்றனர். பி.எச்.டி பட்டம் பெற்ற 410 பேரும் முதல் நிலை தனிச் சிறப்பு தகுதிச் சான்றிதழை 170 பேரும் பெற்றனர். தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) செந்தில்குமார் பி.எச்.டி பட்டம் பெற்றார். "காலந்தோறும் கருப்பர் நகரம்  (Black Town/George Town Through the Ages...)"  சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கம், புனித ஜார்ஜ் கோட்டை உருவான கதை, நிர்வாகம், மக்களின் சமூக - பொருளாதாரக் கல்வி நிலை, புகழ்பெற்ற சின்னங்களின் சொல்லப்படாத சரித்திரம், வால் டாக்ஸ் ரோடு, ஏழுகிணறு, ஆர்மீனியர் தெரு என சென்னையின் பல வரலாற்று தொன்மை சின்னங்களை மறு கண்டுபிடிப்பு செய்து அவர் முனைவர் பட்டம் பெற்றார்.

சென்னை பட்டமளிப்பு விழாவில் இதுவரை இல்லாத வகையில் எம்.எல் சட்ட மேற்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி அபிராமிக்கு மேடையேறி பேசும் வாய்ப்பு தரப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அபிராமி, 'கல்வி உலகில் அனைவரும் சமம். நம்பிக்கையும் தைரியமும் உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் யாராலும் எதையும் சாதிக்க முடியும்'' என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!