வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (06/05/2018)

கடைசி தொடர்பு:14:40 (06/05/2018)

நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்துங்கள்..! மு.க.ஸ்டாலின் காட்டம்

ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்துங்கள் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின்

இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், `நரபலி கேட்கும் நீட்தேர்வை நிறுத்துகள்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவரின் அறிக்கையில், `மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, அவர்களின் எதிர்காலத்துடன் கொடூர ஆட்டம் ஆடிவரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 

டாக்டர் சீட் பெறும் அளவுக்கு +2 தேர்வில் மதிப்பெண் பெற்றும், நீட் கொடுமையால் மருத்துவம் படிக்கமுடியாமல் போன மாணவி அனிதாவின் உயிரை சென்ற ஆண்டு பறிகொடுத்தோம். நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் ஒதுக்கி, தமிழக மாணவர்களையும் அவர்களுக்குத் துணையாகச் சென்ற பெற்றோரையும் அலைக்கழிக்கச் செய்து, மனஉளைச்சலுக்குள்ளான கொடூரத்தால் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியை இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம். 

திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவருக்குக் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால், மாணவரும் அவரின் தந்தையும் மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தநிலையில், எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட்தேர்வை அந்த மாணவர் எழுதிக் கொண்டிருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் அவரின் தந்தை கிருஷ்ணசாமி. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மன உளைச்சல்களால் 47 வயதிலேயே தன் தந்தை மரணமடைந்துவிட, அந்த விவரம்கூட அறியாமல், தேர்வு மையத்தில் மாணவர் எழுதிக் கொண்டிருந்தார் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. 

மருத்துவப் பட்டம் பெற்று டாக்டராகி எத்தனையோ நோயாளிகளின் உயிரைக் காக்கலாம் என்ற கனவில் இருந்த மாணவருக்கு, தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஏக்கமும் வேதனையும் காலம் முழுவதும் நீடிக்கும். தாங்க முடியாத சோகத்தில் உள்ள மாணவருக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாத அ.தி.மு.க அரசின் அலட்சியமே அனிதாவின் உயிரையும் கிருஷ்ணசாமி அவர்களின் உயிரையும் பறித்திருக்கிறது. ஆண்டு தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்விலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்டரீதியான போராட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளாமல், மத்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாகச் செயல்பட்டால், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது' என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.