வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (06/05/2018)

கடைசி தொடர்பு:08:22 (07/05/2018)

கேரளாவில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 3 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அறிவிப்பு..!

மகனின் நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் சென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது தமிழக அரசு. 

தமிழக அரசு

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோருக்கு கேரளாவின் எர்ணாகுளம் நகரில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்கள் கேரளாவுக்குச் சென்று தேர்வு எழுதினர். 17 வயது சிறுவர்களை தனியாக மொழி தெரியாத இடத்துக்கு அனுப்பமுடியாது என்பதால், மாணவர்களுடன் பெற்றோரும் உடன் சென்றனர்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு எர்ணாகுளத்தின் நாலந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்குத் துணையாக தந்தை வந்திருந்தார். கிருஷ்ணசாமிக்கு முன்னதாகவே உடல்நலக் குறைபாடு இருந்ததால், அவர் விடுதி அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகனை நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு அழைத்து வந்த தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணசாமியின் மறைவுக்கு தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இறந்த கிருஷ்ணசாமியின் உடல் விரையில் எர்ணாகுளத்தில் இருந்து தமிழகம் எடுத்து வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.