வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (06/05/2018)

கடைசி தொடர்பு:14:19 (06/05/2018)

தேர்வு அறையில் மயங்கி விழுந்த மாணவன்; தேர்வு மையத்துக்கு வெளியே மயங்கி விழுந்த தாய்..! இது கோவை பரபரப்பு

கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வு எழுதிய சபரி என்ற மாணவன், தேர்வு எழுதும்போது மயக்கமடைந்ததால் மசானிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

நீட்

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. கோவையில் 32 மையங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது. இதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் பெற்றோர் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் சாலையோரம் அமர்ந்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முக்கியமாக, பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்குகூட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். 

இந்நிலையில், கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நீட் தேர்வு நடக்கிறது. இதற்காக, மதுரையைச் சேர்ந்த ரோஸ்லின் என்பவர் தனது மகனை அழைத்து வந்துள்ளார். பயணம், தேர்வு கெடுபிடிகள் உள்ளிட்ட காரணங்களால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பள்ளியின் முன்பு அவர் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார். இதைத்தொடர்ந்து, அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம், வெள்ளலூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவைக்கு தனது மகனுடன் அவர் நேற்றே வந்துள்ளார். ஆனால், தேர்வு பதற்றத்தில், ரோஸ்லின் காலை உணவை சாப்பிடவில்லை. தற்போது உணவு சாப்பிட்ட பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேப்போல, கோவையில் மற்றொரு பகுதியில் கேந்திரிய வித்யாலாயா பள்ளியில் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அன்னனூரைச் சேர்ந்த சபரி என்ற மாணவர் தேர்வு எழுதும்போது திடீரென மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மசானிக் என்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் மயங்கி விழுந்தார் என்றும் உணவு ஒவ்வாமையின் காரணமாக மயங்கிவிழுந்தார் என்றும் தேர்வில் பதிவு எண்ணை மாற்றி எழுதியதால் ஏற்பட்ட பதற்றத்தால் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது. அவர், தற்போது மருத்துவமனையில் இருந்துவருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க