`லாஸ்ட் 5 மினிட்ஸ். பக்..பக் பயணம்!’ - அட்ரெஸ் மாறி வந்த மாணவனுக்கு உதவிய விகடன் போட்டோகிராஃபர்

நீட் விகடன்

பல இடங்களில் நீட் தேர்வு எழுத தாமதமாக சென்ற மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஐந்து நிமிடம் தாமதமாக சென்றவர்கள்கூட அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை மாணவர்களை பெரிதும் பாதித்திருக்கிறது. இந்த சூழலில் அட்ரெஸ் மாறி வந்த மாணவனை கடைசி ஐந்து நிமிடத்திற்குள்ளாக தேர்வு மையத்தில் சேர்த்து நெகிழ வைத்திருக்கிறார் விகடன் போட்டோகிராஃபர் விஜயகுமார். 

அந்த பரபர பயணம்…

"நேரம் சரியாக 9.10- ஐ தாண்டி இருந்தது. சேலம்  மூன்று ரோடு பகுதியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தை நோக்கி வியர்த்து விறுவிறுக்க ஓடிவந்தான் அந்த மாணவன். இன்னும் 20 நிமிடங்களே இருந்தன அனுமதிக்கப்படும் இறுதி நிமிடத்திற்கு. அவனது ஹால்-டிக்கெட்டை போலீஸ் பரிசோதனை செய்தபோதுதான் அவன் அட்ரெஸ் மாறி வந்த விஷயமே தெரிந்தது. 'நீ போக வேண்டியது  செவ்வாய்ப்பேட்டையில உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கூடம்ப்பா…' என்று போலீஸார் சொல்ல சட்டென அவன் முகம் வெளிரிப்போனது. ஏமாற்றமும் இதற்குமேல் செவ்வாய்ப்பேட்டைக்கு போக முடியாதென்ற இயலாமையும் அவனை ஆக்கிரமித்துக்கொள்ள அதே இடத்தில் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டான்.  

அந்தக் காட்சியை கண்டதும் பதைபதைத்துப் போனார் நம் புகைப்படக்காரர் எம். விஜயகுமார். சற்றும் யோசிக்காமல் ஓடிப்போய் தன்  பைக்கை எடுத்தார். அந்த மாணவனை ஏற்றிக்கொண்டு செவ்வாய்ப்பேட்டைக்கு பறந்தார். அவர் செல்லும் வழி  கடுமையான  ட்ராஃபிக்கில் திணறியது. அவனை சரியான நேரத்துக்குள் கொண்டு சேர்த்துவிட முடியும் என்பதில் அங்கிருந்த யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், அந்த மாணவன் ஓடி வந்ததைப் பார்த்த ஒவ்வொருவரும் அவன் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும் என்று நினைத்தார்கள். சரியாக 9.30-க்கு விஜயகுமாரிடமிருந்து போன் வந்தது. லாஸ்ட் 5மினிட்ஸ்ல அவனை அந்த ஸ்கூல்ல கொண்டு சேர்த்துட்டேன் என்று அவர் சொன்னதும்தான் எல்லோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள்.

நீட் விகடன்

விஜயகுமாரிடம் பேசினோம், "சேலத்தில மொத்தம் அஞ்சு வித்யா மந்திர் பள்ளிக்கூடங்கள் இருக்கு. வெளிமாவட்டங்கள்ல இருந்து இங்கே தேர்வெழுத வர்றவங்களுக்கு அது எப்டி தெரியும்?. சேலம் பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கியதும் வித்யா மந்திர் ஸ்கூல் எங்கிருக்கு என்று கேட்குறாங்க. வழி சொல்றவங்களும் எல்லோருக்கும் தெரிந்த மூன்று ரோடு வித்யா மந்திர் ஸ்கூலையே கைகாட்டியிருக்காங்க. எக்கச்சக்கமான ஸ்டுடண்ட்ஸ் காலையிருந்து அப்டி அட்ரெஸ் மாறி வந்தாங்க. இது பெரிய பிரச்னையாகிருச்சி. உடனே  DYFI-யைச் சேர்ந்த இளைஞர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து அந்த மாணவர்களுக்கு உதவி செஞ்சாங்க. 9 மணிக்கு மேல அப்படியான மாணவர்கள் யாரும் வராததால DYFI இளைஞர்கள் போயிட்டாங்க.

 கடைசி நேரத்தில ஒரு பையன் பஸ் ஸ்டாண்டு பக்கத்திலேயிருந்து ஓட்டமா ஓடி வர்றான். அவன்கிட்ட ஆட்டோக்கு கூட காசு இல்ல போல. பெருங்கனவோட, லட்சியத்தை ஏந்திக்கொண்டு அப்படி ஓடி வந்தவன் இடம் மாறி வந்துட்டா எவ்வளவு வேதனையா இருக்கும்? எனக்கு பதறிருச்சு. பைக்ல ஏத்தியும் அவன் அழுகையை நிறுத்தவே இல்லை. வண்டியை ஸ்டார்ட் பண்ணி கியர் போடுறதுக்கு கூட எனக்கு கைவரல. பதற்றத்துல கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சது, சரியான நேரத்துல அவனை கொண்டுசேர்த்த பிறகும்கூட நிற்கவே இல்லை. அந்த இடத்துலதான் எனக்கு பசங்களோட மனநிலையை, என்னால முழுசா உள்வாங்கிக்கொள்ள முடிஞ்சது. நீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கே அவ்வளவு பதற்றம், படபடப்பு ஏற்படுகிறதென்றால். 'அந்த தேர்வில்தான் எங்க வாழ்க்கையே இருக்கு’னு நினைக்கிற மாணவர்கள் எவ்வளவு பதற்றத்தை சந்தித்திருப்பார்கள்.  நினைக்கவே மனசு பதறுகிறது.  இறங்கிப்போகும்போதுதான் தன் பெயர் அஜித், என்றும் விருதாச்சலத்திலிருந்து தனியாக வந்திருப்பதாகவும் சொன்னான் அவன். விருதாச்சலத்திலிருந்து சேலம் வருவதற்கே மாணவர்கள் இப்படி திண்டாடிப்போகிறார்களே கேரளாவுக்கும், ராஜஸ்தானுக்கும் அனுப்பப்பட மாணவர்களின் நிலை என்ன பாடுபட்டிருப்பார்கள் என்று நினைத்தாலே நெஞ்சு கலங்குகிறது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!