`துயரமான நேரத்திலும் அரசியல் வேண்டாம்' -வேண்டுகோள் விடுக்கும் தமிழிசை

நீட் தேர்வுக்காக தனது மகனைக் கேரளா அழைத்துச் சென்ற தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தச் சம்பவத்தை வைத்தும் `எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தராஜன். 

தமிழிசை

மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கேரளா, ஆந்திரா, கர்நாடக மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள விளக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்கு மகனுடன் சென்ற இடத்தில், அவர் மராடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். கிருஷ்ணசாமியின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ட்விட்டர்

இதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில், `நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதி வருகிறார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது.

மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பில் எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பா.ஜ.க. உதவும். மேலும், மிகத் துயரமான இந்த நேரத்தில் இந்த மரணத்தையும் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனத் தமிழக எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். கஸ்தூரி மாகலிங்கத்தின் கல்விச் செலவுக்கு பா.ஜ.க உதவும்' எனப் பதிவிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!