வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (06/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (06/05/2018)

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல், அவரது  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தந்தை கிருஷ்ணசாமியுடன் அவர் எர்ணாகுளம் சென்றார். அவர் இன்று காலை நீட் தேர்வு எழுதச் சென்றிருந்த நிலையில், தந்தை கிருஷ்ணசாமி விடுதியில் இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கிருஷ்ண்சாமி உயிரிழந்தார். தேர்வெழுதி முடித்த பின்னர் வெளியே வந்த பின்னரே, தந்தை இறந்த செய்தி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. 

உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளம் சிட்டி மருத்துவவமனையில்  வைக்கப்பட்டு இருந்தது. மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் உடலைப் பார்த்து கதறி அழுதது, சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், கிருஷ்ணசாமியின் உடலை அவரது மனைவி பாரதியின் தம்பி அன்பரசன் பெற்றுக் கொண்டார். கிருஷ்ணசாமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால் நாளை வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். அதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் உடல்கூறு சோதனை நடத்தாமல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது, கொச்சின் கலெக்டரான அகமது ஒய்.சபீருல்ல்லா மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். உதவி ஆய்வாளர் ஜேக்கப் தலைமையிலான போலீஸார் உடலை கொண்டு செல்கின்றனர். தமிழக எல்லை முடிவில், அவரது உடல் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது.