`மத்திய அரசின் தலையாட்டி பொம்மையா?’ - தமிழக அரசைச் சாடும் விஜயகாந்த்

`தமிழகத்தில் நீட் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருந்தால் அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் இருந்திருக்கும். ஒரு உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்’ என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த்

நாடு முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் உள்ள சுமார் 60 ஆயிரத்து 990 மருத்துவ இடங்கள் நீட் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வினை தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நீட் தேர்வுக்காக தனது மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற இடத்தில் கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் மற்றும் கிருஷ்ணசாமியின் மகனின் கல்விச் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

அறிக்கை

இந்தநிலையில், மறைந்த கிருஷ்ணசாமி மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் போதாது என்பதால் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும். தமிழகத்திலேயே நீட் தேர்வை எழுத அனுமதி கொடுத்திருந்தால், அலைச்சலும், மன உளைச்சலும் இல்லாமல் இருந்திருக்கும். இதுபோன்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். மத்திய அரசு எதைச்செய்தாலும், சொன்னாலும், தமிழக அரசு தலையாட்டி பொம்மையாகச் சம்மதம் தெரிவிக்கிறதே தவிர தமிழகத்தினுடைய உரிமையை எதிர்த்துக் கேட்கின்ற தைரியம் தமிழக அரசுக்கு கிடையாது. கிருஷ்ணசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!