வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/05/2018)

கடைசி தொடர்பு:15:53 (27/06/2018)

`மேடையில் மீன்துறை அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட அமைச்சர்!’ - பாதியில் முடிந்த படகுகட்டும் பணி தொடக்க விழா

படகு கட்டும் பணி துவக்க விழாவில் மீன் துறை உதவி இயக்குநரை மிரட்டும் தொனியில் பேசிய அமைச்சர் மணிகண்டன் செயலால் அதிகாரிகள் அதிர்ச்சி. முழுமை பெறாமல் முடிந்த விழாவினால் மீனவர்களும் அதிர்ச்சி.

படகு கட்டும் பணி தொடக்க விழாவில் மீன் துறை உதவி இயக்குநரை மிரட்டும் தொனியில் அமைச்சர் மணிகண்டன் பேசியதால், அந்த விழா பாதியில் முடிந்தது. 

அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்த படகு கட்டும் பணி

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தேவையான படகுகள் கட்டும் பணியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடந்தது. மீன்துறை இயக்குநர்  சமீரான் முன்னிலை வகித்தார். படகு கட்டும் பணியை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில் ''இந்த தொகுதியின் பிரதிநிதியாக இருந்தவர்கள் தேர்தல் நேரத்தில் வருவார்கள், தேர்தலில் நிற்பார்கள், வெல்வார்கள், சென்றுவிடுவார்கள். இந்த பகுதி மக்களுக்கு என்ன குறை இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவை. அவர்களைக் காப்பாற்றுவதற்கு குரல் கொடுப்பதற்கு ஒரு மனிதன் இருந்தாரா என்றால், கடந்த 20 ஆண்டு காலத்தில் அப்படி ஒருவர் இருந்தது இல்லை. ஆனால், தற்பொழுது கூப்பிட்ட உங்கள் குரலை கேட்டு ஓடோடி வந்து உழைக்க கூடிய ஒரு இளைஞன், ஒரு படித்த மருத்துவன், இந்த மண்ணின் மைந்தன், உங்கள் கஷ்டங்களை தெரிந்தவன் என்ற முறையில் நான் இருக்கிறேன். என்னை நீங்கள் நம்பியிருக்கிறீர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் கடந்த ஆட்சியில் மீன்துறை அமைச்சராக இருந்தவர், இந்த மாவட்ட மீனவர்களைக் கண்டு கொள்வதில்லை என வருத்தத்தோடு சொல்வார்கள். இப்போது அப்படியில்லை. உங்கள் குறைகளை ஓடோடி வந்து கேட்டு முதல்வரிடத்தில் எடுத்துரைக்கும் நிலையில் நான் இருக்கிறேன். 

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு படகு வாங்க  மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கியது, மாநில அரசு ரூ.86 கோடி ஒதுக்கியது. இதன் மூலம் 10 பேருக்கு படகுகள் கிடைக்க உள்ளது. இதனை அதிகரிக்க மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி இறங்கு தளம் 70 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்களாகக் கருதப்பட வேண்டும். தடை காலம், புயல் காலம் போன்றவற்றின்போது தமிழக அரசு நிவாரண தொகை வழங்கி வருகிறது. ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்ட  புயல்கால சேமிப்பு நிவாரண நிதி, ராமேஸ்வரம் பகுதியில் 292 பேருக்கு கொடுக்கப்படவில்லை. இங்கிருக்கும் அதிகாரிகளிடமும், அமைச்சரிடமும் பலமுறை சொல்லியும் அது வழங்கப்படவில்லை. காரணம் கேட்டால் அந்த மீனவர்கள் படகு ஓனர்கள் என சொல்கிறார்கள். அவர்களுக்கு எப்படி தர முடியும் என கேட்கிறார்கள். ராமேஸ்வரம் உதவி இயக்குநர் மணிகண்டனிடம் பலமுறை சொல்லிவிட்டேன். இது நம் பாக்கெட்டில் இருந்து கொடுக்கவில்லை. உங்கள் வீட்டில் இருந்தும் கொடுக்கவில்லை. அரசாங்கம் கொடுக்கிறது. அமைச்சர் என்ற முறையில் பல முறை வலியுறுத்தியும் கொடுக்கவில்லை.  அமைச்சர் என்ற மரியாதை இல்லாமல் மீனவர்களுக்கு எதிரான போக்கினை கடைபிடிக்கிறீர்கள்.

மீனவர்களிடம் இருந்து பங்களிப்பு தொகை பெறும்போது அவர்கள் ஓனர்கள் என தெரியவில்லையா?. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அமைச்சர் சொன்னால் செய்துகொடுக்க வேண்டியதுதானே?. மற்ற அதிகாரிகள் நான் சொல்வதை உடனே செய்து கொடுக்கிறார்கள். மணிகண்டன் மட்டும்தான் செய்ய மறுக்கிறார். இதே தவறை மண்டபத்தில் பணியாற்றும் போதும் செய்தார். அதனால் பணி மாறுதலும் செய்யப்பட்டார். இப்போது இங்கும் இதையே செய்கிறார். மீனவர் கணக்கு எடுக்கும் போதும், அவர்களிடம் இருந்து பங்கு தொகை வசூலிக்கும் போதும் அவர்கள் ஓனர் என தெரியவில்லையா? உங்கள் தவறை திருத்திக்கொண்டு இயக்குநர் அவர்கள் உடனடியாக மீனவர்களுக்கான அந்த பணத்தினை வழங்க வேண்டும்'' என்றார். 

இதையடுத்து விழா முடிவடைய இருந்த நிலையில் கோபத்துடன் மேடையை விட்டு இறங்கிய மீன் துறை இயக்குநர் சமீரான், மீன்துறை உதவி இயக்குநர் மணிகண்டனை அழைத்து ''யாருக்கும் பயப்படாமல் விதிப்படி வேலை செய்யுங்கள். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். அதையும் மீறி ஏதாவது செய்ய வேண்டும் என்றால், என் மூலம் தான் செய்ய வேண்டும். அதனால் கவலைப்படாமல் நேர்மையாக பணியாற்றுங்கள்'' என அவரை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அமைச்சர் மணிகண்டனின்  மிரட்டல் பேச்சுக்கு அந்த இடத்திலேயே அதிரடியாக ரியாக்‌ஷன் காட்டிய மீன்துறை இயக்குநர் சமீரானை, மீனவர்கள் சமாதான படுத்த முயன்றும் முடியவில்லை. இதனால் விழா முழுமை பெறாமலேயே முடிந்தது.