`கொஸ்டீன் பேப்பரைத் திரும்பக் கொடுங்க!’ - தேர்வு கண்காணிப்பாளரை முற்றுகையிட்ட மாணவர்கள் | Students staged prorest in Madurai NEET centre

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/05/2018)

கடைசி தொடர்பு:19:23 (06/05/2018)

`கொஸ்டீன் பேப்பரைத் திரும்பக் கொடுங்க!’ - தேர்வு கண்காணிப்பாளரை முற்றுகையிட்ட மாணவர்கள்

மதுரை நரிமேடு பகுதியில் தாமதமாகத் தொடங்கப்பட்ட நீட் தேர்வினை எழுதிய 96 மாணவ, மாணவிகளிடமும் வினாத்தாள்கள் திரும்ப வாங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

மாணவர்கள் முற்றுகை

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில், எர்ணாகுளத்தில் தேர்வெழுத மகனை அழைத்துச் சென்றிருந்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. 

மாணவர்கள் நீட் தேர்வு மையத்துக்குக் கடும் சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம், முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் சில தேர்வு மையங்களில் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னரே நீட் தேர்வு தொடங்கியது. மதுரை நரிமேடு பகுதியில் உள்ள நாய்ஸ் பள்ளியில் 720 மாணவர்களுக்கு நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 மாணவர்கள் தேர்வெழுத வராத நிலையில், 120 மாணவர்களுக்கு ஆங்கில கேள்வித் தாளுக்குப் பதிலாக, இந்தியில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அவர்களில் 24 பேருக்கு மாற்றுக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு தேர்வு தொடங்கியது. மீதமுள்ள 96 மாணவர்களுக்குக் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு மதியம் 3 மணிக்கே தேர்வு தொடங்கியது. நிர்வாகம் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாணவர்கள் மதிய உணவு எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், மாணவர்கள் சோர்வுடனேயே அந்த தேர்வை எழுதினர். இதனிடையே, தாமதமாகத் தேர்வு எழுதிய மாணவர்களிடமிருந்து வினாத்தாளைப் பெற்றுக்கொண்ட பின்னரே, அவர்களை வெளியேற பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. மேலும், அவர்களிடம் எந்தவித சோர்வும் ஏற்படவில்லை என எழுதப்பட்ட தாளில் கையெழுத்தும் வாங்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர். வழக்கமான நேரத்தில் தேர்வெழுதிய மாணவர்களிடம் வினாத்தாள்கள் திரும்பப் பெறப்படாத நிலையில், தங்களிடம் மட்டும்  வினாத்தாள்கள் திரும்பப் பெறப்பட்டது மாணவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.  இதனால், தங்களது விடைத்தாள்கள் திருத்தப்படுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் அவர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். இதையடுத்து, தங்களது கேள்வித்தாள்களைத் திரும்ப அளிக்குமாறு மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தேர்வு கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் உரிய பதில் கூறாத நிலையில், மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க