வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (06/05/2018)

கடைசி தொடர்பு:08:17 (07/05/2018)

`நாங்களும் கறுப்புக் கொடி காட்டுவோம்!’ - மல்லுக்கட்டும் அ.தி.மு.க - தி.மு.க.

`கோவில்பட்டி வரும் தமிழக முதல்வருக்கு அவர்கள் கறுப்புக் கொடி காட்டினால், செயல்படாத தி.மு.கவின் செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நாங்களும் கறுப்பு கொடி காட்டுவோம்' என அ.தி.மு.கவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்

"தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகைதரும் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்டப்படும், தன்னை அரைவேக்காடு எனத் தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜு மீது தி.மு.க., மகளிரணியினர் கல்லெறியில் ஈடுபடுவார்கள்" என  தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ.,   கீதாஜீவன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.த.செல்லப்பாண்டியன் கூறுகையில், ``தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடிக்கு என தனியாக குடிநீர் திட்டம் எதுவும் கொண்டு வரப்படவில்லை. கடந்த காலத்தில் அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் தி.மு.க., கொண்டு வந்ததாக கீதாஜீவன் எம்.எல்.ஏ., கூறிவருகிறார். தூத்துக்குடி மாநகராட்சியைப் பொறுத்தவரை, 4-வது பைப் லைன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டியவர்களுக்கு மாநகராட்சி மூலம் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கீதாஜீவனுக்கு என்ன தெரியும்?. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவர் பேசி வருகிறார். அவருக்கு சரித்திரம் தெரியுமா? தற்போது கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான 2-வது பைப் லைன் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. 2-வது நீர்தேக்க தொட்டிகளின் பணிகள் மட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. வருகின்ற 11-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

மக்களுக்காக எந்தப் பணியும் செய்யாமல் கமிஷன் மட்டுமே பெற்று வந்தவர்கள் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகக் கூறி வருகிறார்கள். கீதாஜீவன் எம்.எல்.ஏ., அமைச்சர் கடம்பூர் ராஜூவை மிரட்டும் வகையில் பேசிவருகிறார். முதலமைச்சருக்கு அவர்கள் கறுப்புக் கொடி காட்டினால் செயல்படாத தி.மு.க., செயல்தலைவருக்கு நாங்களும் கறுப்புக் கொடி காட்டுவோம்.  மகளிர் அணியினரை வைத்து அமைச்சரை மீது கல் எறிதலில் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு தக்க பாடம் புகட்டிட, எங்களிடமும் மகளிர் அணியினர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை.
இன்று மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க., மட்டும் தான். கூடிய விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நதிநீரை தமிழகத்துக்கு முதல்வர் பெற்றுத்தருவார்" என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க